இயக்குநர் பாரதிராஜா வீட்டுக்கு சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

இயக்குநர் பாரதிராஜாவை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார்.

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாதவர் இயக்குநர் பாரதிராஜா. அவரது நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படம் வெளியாகி அவரது நடிப்புக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. அந்தப் படத்தில் நடிகர் தனுஷின் தாத்தாவாக நடித்திருந்தார் பாரதிராஜா. இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்று உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், குணமடைந்து அவர் வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியதையொட்டி இன்று நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர் கே.என்.நேரு, கவிப்பேரரசு வைரமுத்து, பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் உடனிருந்தனர்.