திண்டு்க்கல் காந்திகிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கிறார் பிரதமர் மோடி.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அடுத்துள்ள காந்திகிராமிய பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா நாளை (நவம்பர் 11) நடைபெற உள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். மொத்தம் 2,314 மாணவ, மாணவிகள் பட்டங்கள் பெறவுள்ளனர். 2018-2019, 2019-2020 ஆகிய கல்வியாண்டில் முதுகலை, இளங்கலை, டிப்ளமோ முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் தங்கப் பதக்கம் பெறும் 4 பேருக்கு பிரதமர் மோடி பட்டம் வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை ஒட்டி பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களையும் பிரதமர் மோடி வழங்கி அவர்களை கௌரவிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
‘அம்பேத்கரும் மோடியும்’ என்ற புத்தகத்தை குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டார். இந்த புத்தகத்திற்கு இளையராஜா எழுதியிருந்த அணிந்துரை சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், நூல் வெளியிட்டு விழாவில் அவர் பங்கேற்கவில்லை. முன்னதாக அவரை நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்பியாக மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. தற்போது அவருக்கு காந்திகிராமிய பல்கலைக்கழகத்தின் சார்பில் கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் அளிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்ததக்கது.