‘மாமன்னன்’ படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கவுள்ள ‘வாழை’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்’ படத்தை இயக்கினார். இந்தப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் தனது நான்காவது படைப்பாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார். இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை நடிகர் உதயநிதி கலந்து கொண்டு துவங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் துவங்கியது. இதை நடிகர் உதயநிதி துவக்கி வைத்தார். 1994ம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாவதாக கூறப்படுகிறது. நான்கு சிறுவர்களை மையப்படுத்து இப்படம் எடுக்கப்பட உள்ளது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா போன்ற பலர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திற்காக உருவாகும் இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ‘மாமன்னன்’ படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என தகவல்கள் வெளியானது. கபடியை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மாரி செல்வராஜின் ‘வாழை’ பட அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.