ஆபாச பேச்சு சர்ச்சையில் சிக்கி பாஜக மாநில நிர்வாகிகள் டெய்சி மற்றும் திருச்சி சூர்யா சமாதானமாகிவிட்டதை விமர்சித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
பாஜகவின் மாநில நிர்வாகிகளான திருச்சி சூர்யா மற்றும் டெய்சி சரண் இருவருக்கும் இடையே தொலைபேசி உரையாடல் வெளியாகி பெரும் சர்ச்சையானது. அந்த ஆடியோவில், டெய்சியை மிக மிக ஆபாசமாக, இழிவான சொற்களால் திருச்சி சூர்யா மிரட்டி இருந்தார். அத்துடன் பாலியல் ரீதியாகவும் அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்திருந்தார் திருச்சி சூர்யா. திருச்சி சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவின் காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். திருச்சி சூர்யாவை கைது செய்ய வேண்டும் என்றும் சமூகவலைதளங்களில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தமிழக பாஜக மேலிடமோ, நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுத்தது; காயத்ரி ரகுராமை 6 மாதம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. திருச்சி சூர்யாவுக்கு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
அத்துடன் இந்த பிரச்சனை தொடர்பாக பாஜக மேலிடம் அமைத்த குழு நேற்று திருப்பூரில் விசாரணை நடத்தியது. திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கனகசபாவதி தலைமையில் இரு தரப்பினரிடமும் விசாரிக்கப்பட்டது. இதில் டெய்சி மற்றும் சூர்யா சிவா இருவரும் ஆஜராகி தங்கள் விளக்கங்களை அளித்திருந்தனர். இந்த விசாரணைக்குப் பின்னர் திருச்சி சூர்யாவும் டெய்சி சரணும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். டெய்சி சரண் செய்தியாளர்களிடம், கண் பட்ட நிகழ்வு போல ஒரு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விட்டது. சூர்யா சிவா தனக்கு தம்பி போல தான். உணர்ச்சிவசப்பட்டு பேசிய வார்த்தைகள் அரசியல் காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து விட்டது. இரு தரப்பும் பரஸ்பரம் சுமூகமாக பிரச்சனையை முடித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளோம் என்றார்.
அதேபோல் திருச்சி சூர்யா கூறுகையில், அரசியல் காரணங்களுக்காகவே இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டது. இருவரும் பரஸ்பரம் பிரச்சனையை முடித்துக் கொண்டோம். எங்கள் இருவருக்கும் குடும்ப ரீதியான நட்பு தொடரும் என்று தெரிவித்தார். இவ்வளவு ஆபாச அர்ச்சனைகளுக்குப் பின் இருவரும் அக்கா-தம்பி என பேசியிருப்பதும் சர்ச்சையாகி இருக்கிறது.
இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
என்னது தம்பியா ?! அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு அரை பைசாவுக்கு விளக்க அறிக்கை கூட விடலை. அப்போ பேசுனதெல்லாம் கரெக்ட்டுதான் போல. @DaisyThangaiya-வுக்காக பெண்ணியம் கண்ணியம்ன்னு பொங்கின என்னை நானே.. இனி BJP ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் ! #உவ்வே. இவ்வாறு நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.