பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை அனுமதி இன்றி பயன்படுத்த தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன். 80 வயதிலும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளில் சுறுசுறுப்பாக பங்கேற்று வருகிறார். மும்பையில் தான் மிகவும் விரும்பி கட்டிக் கொண்ட அழகிய ஜல்சா வீட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது ரசிகர்களை சந்தித்து அவர் பேசி வருகிறார். மேலும், அவர்களோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்.
இந்த நிலையில் பாலிவுட் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், தனது புகைப்படங்களை அனுமதி இன்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘அனுமதி இன்றி சில விளம்பரங்கள் உள்ளிட்டவற்றில் தனது பெயர் பயன்படுத்துவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்றும் கோரி இருந்தார்.
இந்நிலையில் இன்று, இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா விசாரித்தார். அப்போது அமிதாப் பச்சன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “நடிகர் அமிதாப் பச்சன் பெயரில் போலியான நிகழ்ச்சியில் லாட்டரி மோசடி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், அமிதாப் பச்சனின் புகைப்படங்களை பயன்படுத்தி துணி, சுவரொட்டிகள் தயாரிக்கின்றனர். எனவே, அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படங்கள், குரல் ஆகியவற்றை முன் அனுமதி இன்றி வணிக நோக்கத்துடன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என, வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி நவீன் சாவ்லா, நடிகர் அமிதாப் பச்சன் பெயர், போட்டோ, குரலை முன் அனுமதி இன்றி பிறர் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத் தொடர்பு சேவை வழங்குனர்கள் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.