அனைவருக்கும் என் நன்றி. நான் நல்லா இருக்கேன்: கமல்ஹாசன்!

இப்போதெல்லாம் சின்ன இருமல் என்றால் கூட என்னை அதிகமாக விசாரிக்கிறார்கள், அதற்குக் காரணம் ஒன்று, ஊடகம், அப்புறம் பெருகி இருக்கும் அன்பு என்று நான் நம்புகிறேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

லேசான காய்ச்சல் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். அவர் வீட்டிலேயே ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் கமல்ஹாசன். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ள “டிஎஸ்பி” திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கமலஹாசன், “முன்பெல்லாம் பெரிய விபத்துகள் நேரும்போது கூட எப்போது ஷூட்டிங் வருவீர்கள் என்று கேட்பார்கள், அடுத்த படம் எப்போது ரிலீஸ் என்று கேட்பார்கள். இப்போது சின்ன இருமல் என்றால் கூட எனக்கு பெரிய செய்திகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் ஒன்று, ஊடகம், அப்புறம் பெருகி இருக்கும் அன்பு என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் என் நன்றி. நான் நல்லா இருக்கேன்” எனத் தெரிவித்தார்.