நடிகர் ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று திருவிழாவாக ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பல பிரபலங்கள் மத்தியிலும் கொண்டாடப்படுகிறது.
கமல்ஹாசனின் படங்களில் வில்லனாக நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் பின்னர் கமல்ஹாசனுக்கு போட்டி நடிகராக மாறி 40 அண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் கமல் மற்றும் ரஜினியின் நட்பும் போட்டியும் அப்படியே தொடர்கிறது. விக்ரம் படத்தின் வசூல் சாதனையை ஜெயிலர் முறியடிக்குமா என்றும் ஜெயிலருக்கு டப் கொடுக்க இந்தியன் 2 இறக்குகிறேன் என இருவரும் இந்த வயதிலும் அடுத்த தலைமுறை நடிகருக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாகவே கெத்துக் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்” என வாழ்த்து போட்டு நெகிழ வைத்துள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவிக்க அவரது ரசிகர்கள் கொட்டும் மழையிலும் போயஸ்கார்டனில் உள்ள வீட்டின்முன்பு திரண்டனர். இந்நிலையில் லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “ரஜினிகாந்த் ஊரில் இல்லை, அவர் ஊரில் இருந்திருந்தால் ரசிகர்களை சந்தித்து இருப்பார். அவர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.
