தமிழ்நாடு என்று அழைப்பதே சரி: இயக்குநர் வெற்றிமாறன்

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்று அழைப்பதை விடவும், தமிழகம் என்று கூறுவதே சரியாக இருக்கும் என்று பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் வெற்றிமாறன், தமிழ்நாடு என்று அழைப்பதே சரி என்று பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர் வெற்றிமாறன். காவல்துறையின் உரிமை மீறல், சாதிய தீண்டாமை, மக்களின் தேவை உள்ளிட்ட பல்வேறு சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கியவர்.
அதுமட்டுமல்லாமல் சமகால தமிழ் சினிமாவில் சமூக அக்கறையுடன் அரசியல் தெளிவும் கொண்ட இயக்குநராகவும் வெற்றிமாறன் அறியப்படுகிறார். இதற்காகவே இயக்குநர் வெற்றிமாறனை ரசிகர்கள் அதிகமாக கொண்டாடப்பட்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் ராஜராஜ சோழன் விவகாரம் குறித்து வெற்றிமாறன் பேசிய கருத்துகள் அரசியல் கட்சிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதேபோல் தேசிய அரசியல் தொடர்பாகவும் வெற்றிமாறன் பேசும் கருத்துகள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடா, தமிழகமா என்று விவாதம் தமிழக அரசியல் பூதாகரமாய் மாறியுள்ளது. சில நாட்களுக்கு முன் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு என்று அழைப்பதை விடவும், தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருந்தார். இதற்கு பாஜகவினர் ஆதரவளித்து வருகின்றனர். ஆனால் திமுக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழ்நாடு மட்டுமே சரி என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே சென்னையில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். இந்த பயிலரங்கத்தில் கலந்துகொண்ட இளைஞர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வெற்றிமாறன் கூறுகையில், இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடப்பது மிகச்சிறந்த ஒன்றாகவே பார்க்கிறேன். அதுமட்டுமல்லாமல் கலைகள் சார்ந்த ஆளுமைகளோடு இளைஞர்கள் உரையாடுவது சிறந்த ஏற்பாடு. சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் முன்னோக்கி நகர்வதற்கான வழி இது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, ஆளுநரின் தமிழ்நாடு சர்ச்சை குறித்து தமிழ்நாடா, தமிழகமா? எது சரி என்ற கேள்விக்கு, தமிழ்நாடு என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தார்.