தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையின்போது நடந்த நிகழ்வுகளும் திமுக – ஆளுநர் மோதலை உச்சகட்டமாக்கி விட்டது. ஆளுநர், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் சில பகுதிகளை தவிர்த்து, தானே சிலவற்றைப் பேசினார். இதனால், ஆளுநர் உரை அவை குறிப்பில் இடம்பெறாது எனக்கூறி அரசு அச்சிட்டு கொடுத்த ஆங்கில உரையும், சபாநாயகர் வாசித்த தமிழாக்க உரைதான் அவைக் குறிப்பில் ஏற்றப்படும் என தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையே பதிவேற்றப்பட்டது. இதற்கிடையே, முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்தபோது, ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியேறினார். ஆளுநர் சட்டப்பேரவையை அவமதித்து விட்டதாக திமுக உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேசமயம், ஆளுநரை திமுக அரசு அவமதித்துவிட்டது என பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். சட்டப்பேரவையில் நடந்த நேற்றைய நிகழ்வு, அரசியல் அரங்கையும், சமூக வலைதளங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திராவிட இயக்க ஆதரவாளரும், நடிகருமான சத்யராஜ், நேற்றைய நிகழ்வைக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டியுள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சத்யராஜ், “மனிதருக்கு அழகு சிரிப்பு. சிரிப்பை விட அழகானது புன்னகை. சமீபத்தில் ஒரு புன்னகை என்னை ரொம்பவே கவர்ந்தது. அது, சட்டசபையில், நமது தமிழ்நாடு முதல்வர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் புன்னகை. அந்தப் புன்னகையில் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் சுயமரியாதை சுடர்விட்டது. பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் பளிச்சிட்டது. கலைஞர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி கிளர்ந்தெழுந்தது. தமிழ்நாடு எனும் மாநிலத்தில் வாழும் ஒரு சாதார குடிமகனாக முதல்வரின் புன்னகையில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். காலரை கூட தூக்கி விட்டுக் கொள்கிறேன். HATSOFF TO OUR CM முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என சத்யராஜ் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் வாசித்தபோது, ஆளுநர் கோபமாக வெளியேறியபோது முதலமைச்சர் ஸ்டாலின் லேசாகப் புன்னகை செய்ததைக் குறிப்பிட்டு சத்யராஜ் பேசியுள்ளார்.