தம்பி ரவி, திருந்தினால் முழுதாக ஊர்போய்ச் சேரலாம் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதுதான் என்று ஆளுநர் ஆர்.ஏன். ரவி பேசியது சட்டசபை வரை ஒளித்தது. ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு குறிப்பிடாத வார்த்தைகளை பேசியதுடன், தமிழ்நாடு அரசியல் வரலாற்று தலைவர்களின் பெயரை வாசிக்காமல் அந்த பக்கத்தை கடந்து சென்றார். மேலும், தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே இருக்கையில் இருந்து எழுந்து வெளியேறினார். அதற்கு உள்ளிருந்த சட்டசபை உறுப்பினர்கள் சிலர் கையை காட்டி கலாய்த்ததும் வேடிக்கையாக இருந்தது. இருப்பினும், சட்டசபையில் நேற்று நடந்த அமளி துமளிக்கு பிறகு ஆளுநர் ரவி இன்று ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அதாவது, ‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பதில் தவறில்லை, அதை அரசியலாக்கும்போதுதான் பிரச்சனை ஆகிறது என்றும் ஒன்றிய அரசு’ என அழைத்து அவமதிக்கும்போதுதான் அது பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்றும் ஆர்.என். ரவி கூறினார். திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதை பாஜகவினர் விரும்பவில்லை. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ஆளுநர் தமிழகம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், பாஜகவினர் இவ்வாறு பேசியிருந்தால் இவ்வளவு பிரச்சினை ஆகியிருக்காது. ஒரு மாநிலத்தின் ஆளுநர் பாஜகவுக்கு ஆதரவாக அரசியல் செய்து எதிர்க்கட்சியை போல நடந்துகொள்வதைத்தான் அரசியல் கட்சிகளும், தமிழ்நாடு மக்களும் எதிர்க்கின்றனர்.
இந்த நிலையில் பிரபல தமிழ் இசையமைப்பாளரும், இயக்குனருமான ஜேம்ஸ் வசந்தன் ஆளுநரை விமர்சித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியுள்ளதாவது:-
தம்பி ரவி, தமிழனின் வரலாறுக்கு முன்னால், தமிழனின் வீரத்துக்கு முன்னால், தமிழனின் தீரத்துக்கு முன்னால், தமிழனின் திறனுக்கு முன்னால், தமிழனின் அறிவுக்கு முன்னால், தமிழனின் துணிவுக்கு முன்னால், தமிழனின் தெளிவுக்கு முன்னால் பொடியன் நீ.
அதனால்தான் “தம்பி”! எங்கள் மொழியைப் பற்றி, எங்கள் இனத்தைப் பற்றி, எங்கள் மண்ணைப் பற்றி, எங்கள் தொன்மையைப் பற்றி எங்களுக்குத் தெரியும். உன்னைப் போன்றவர்தான் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு உனக்கு இந்த ஆயுள் போதாது!
உலகுக்கே பேசக்கற்றுத் தந்த இனம். மானத்தையும், வீரத்தையும் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த இனம். எங்கள் இனப்பெருமைக்கு முன்னால் நீ தூசு கூட இல்லை! பதரான நீ எங்களை உரசிப் பார்க்காதே!திருந்தினால் முழுதாக ஊர்போய்ச் சேரலாம்! முரண்டுபிடித்தால் திருத்தப்படுவாய் – ஒவ்வொரு தமிழனாலும், தமிழச்சியாலும்! இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.