‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விருப்பம்: மஞ்சு வாரியர்

அஜித் குமாரின் ‘துணிவு’ திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகி மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, ‘துணிவு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தில் கண்மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார்.

இதன் பிறகு அவர் பேசுகையில், ”முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தேன். அதிரடி வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை. இது போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பயிற்சி அவசியம். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. கேரளாவில் இந்த படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன்” என்றார்.