நான் விஜயை முதலமைச்சர் ஆவார் பிரதமர் ஆவார் என்று சொல்லவில்லை: சரத்குமார்

நான் விஜயை சூப்பர் ஸ்டார் என்று தான் சொன்னேன் முதலமைச்சர் ஆவார் பிரதமர் ஆவார் என்று சொல்லவில்லை என்று சரத்குமார் கூறினார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரை உலகில் அதிக ரசிகர்கள் குறிப்பாக இளைஞர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் மற்றும் அஜித் நடித்துள்ள வாரிசு மற்றும் துணிவு படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் இருந்தே இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் நேரில் கூட மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில், படம் வெளியான பிறகு யார் படம் ஹிட் என மோதல் எகிறியுள்ளது. இரு படங்களுமே வெற்றி பெற்றுள்ளது.. இரண்டுமே நன்றாக உள்ளது என பொதுவான ரசிகர்கள் சொல்லி வந்தாலும் வழக்கம் போல விஜய் அஜித் ரசிகர்கள் மோதல் போக்கை கையாண்டு வருகின்றனர். விஜய் படத்தின் பாடல்கள் வெளியான போது அது யூட்யூப் மூலம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதே நேரத்தில் அந்த பாடல்களை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர்.

இதற்கிடையே வாரிசு படத்தின் விழாவில் பேசிய அந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் என்று பற்ற வைத்தார். அதற்கு முன்னதாகவே நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் அவருக்கு அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் எனக் கூறியதும் சமூக வலைதளங்களில் பரபரப்பை பற்றவைத்தது. போதாக்குறைக்கு நடிகர் சரத்குமாரும் இந்த பட்டியலில் சேர்ந்து கொண்டார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வாரிசு படத்தில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார்,”சூரியவம்சம் பட விழாவில் பேசிய போதே எதிர்காலத்தில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என சொன்னேன். அது நிறைவேற்றிவிட்டது. இப்போது விஜய் தான் சூப்பர் ஸ்டார்” என கூறினார். இதையடுத்து ரஜினி ரசிகர்களும் மற்றும் பொதுவான ரசிகர்களும் சரத்குமாரை விமர்சிக்க தொடங்கினர்.
மேலும் இது தொடர்பாக கடும் விமர்சனங்களையும் அவர் சந்திக்க நேர்ந்தது.

இந்த நிலையில் நேற்று வாரிசு படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமாரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும்போது விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தீர்களே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த சரத்குமார், “என் மகனுக்கு நான் தான் சூப்பர் ஸ்டார்.. எனக்கு என் அப்பா தான் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டார் என்ற விஷயத்தை பெரிதுபடுத்தி உலகத்திலேயே இதுதான் பெரிய பிரச்சனை போல நீங்கள் ஆக்கிவிட்டீர்கள். நான் விஜயை சூப்பர் ஸ்டார் என்று தான் சொன்னேன். முதலமைச்சர் ஆவார் பிரதமர் ஆவார் என்று சொல்லவில்லை. சூப்பர் ஸ்டார் என்பது ஒரு டைட்டில் அவ்வளவுதான். நான் சுப்ரீம் ஸ்டார்.. சூப்பர் ஸ்டார் பெருசா சுப்ரீம் ஸ்டார் பெருசா?” என கடுமையாக பதில் அளித்து விட்டு சென்றார்.