இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்டுடியோவில் ஏற்பட்ட விபத்தில் லைட்மேன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் ஏ.ஆர்.ஆர். ஃபில்ம் சிட்டி என்ற ஸ்டுடியோ உள்ளது. சில படப்பிடிப்புகள் இங்கு நடைபெறும். இந்நிலையில், சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் வெப்பன் படத்திற்காக ஏ.ஆர். ஃபில்ம் சிட்டி ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு வருகின்றது. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த லைட்மேன் குமார் என்பவர் இன்று காலை 40 அடி உயரத்தில் விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு குமார் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கவரைப்பேட்டை காவல்துறையினர் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.