கோவிலுக்குள் நுழைய அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு!

கோவிலுக்குள் நுழைய நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனை தொடர்ந்து வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா என அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். அமலா பாலுக்கு மைனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக விக்ரம், ஆர்யா, விஜய், ஜெயம் ரவி, தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்தார் அமலா பால். நடிகை அமலா பால் இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள் படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சில ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்த அவர்கள் 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அந்த திருமண வாழ்க்கை அடுத்த 3 ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்துக்கு பிறகு சுதந்திரப் பறவையான அமலா பால் தொடர்ந்து படங்கள், வெப் சீரிஸ்கள் என பிஸியாக இருந்து வந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நடித்தார் அமலா பால். இந்தப் படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்ததால் பெரும் விமர்சனத்துக்கு ஆளானார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும்படி அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. மேலும் புதிய கார் வாங்கியதில் சர்ச்சை, முன்னாள் காதலருடன் பிரச்சனை என அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வந்தார் அமலா பால். கடைசியாக அமலா பால் நடிப்பில் கடாவர் படம் வெளியானது. இந்தப் படத்தை நடிகை அமலா பாலே தயாரித்திருந்தார். தற்போது மலையாளம் இந்தி என 4 படங்களில் நடித்து வருகிறார் அமலா பால்.

இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவர் கோவிலுக்குள் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகை அமலா பால். மத பாகுபாடு காரணமாக அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக நடிகை அமலா பால் குற்றம் சாட்டியுள்ளார். நடிகை அமலா பால திங்கட்கிழமை கோயிலுக்குச் சென்றபோது, அவருக்கு கோவில் அதிகாரிகளால் தரிசனம் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கோவிலுக்குள் இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் பழக்கவழக்கங்களை மேற்கோள் காட்டி தனக்கு தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் கோவிலுக்கு எதிரே உள்ள சாலையில் இருந்து அம்மனை தரிசனம் செய்யும்படி கோவில் நிர்வாகிகள் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார் நடிகை அமலா பால்.

கோவிலின் பார்வையாளர்கள் பதிவேட்டில் அமலா பால் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “அம்மாவைக் காணாவிட்டாலும் அதனை உணர்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 2023ஆம் ஆண்டில் கூட மதப் பாகுபாடு இன்னும் நிலவுகிறது என்பது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. என்னால் தேவியின் அருகில் செல்ல முடியவில்லை, ஆனால் தூரத்திலிருந்து அந்த ஸ்பிரிட்டை உணர முடிந்தது. மதப் பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும் என்று நம்புகிறேன். நேரம் வரும், நாம் அனைவரும் மதத்தின் அடிப்படையில் அல்ல, சமமாக நடத்தப்படுவோம்” என்று அமலா பால் கோவில் பார்வையாளர் பதிவேட்டில் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கோவில் நிர்வாகிகள், கோவில் அதிகாரிகள் ஏற்கனவே உள்ள நெறிமுறைகளை மட்டுமே பின்பற்றுவதாகக் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவில் அறக்கட்டளை நிர்வாகி பிரசூன் குமார், பிற மதத்தை சேர்ந்த பக்தர்கள் பலர் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர், ஆனால் அது யாருக்கும் தெரியாது. ஆனால், ஒரு பிரபலம் வந்தால் அது சர்ச்சையாகி விடுகிறது என தெரிவித்துள்ளார். அமலா பாலுக்கு மதத்தை காரணம் காட்டி கோவிலில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.