‘நெடுமி’ பட விழாவில் இயக்குனர் பேரரசு பங்கேற்று கொண்டு பேசினார். கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்” என பேரரசு தெரிவித்துள்ளார்.
பனை மர தொழில் மற்றும் அதை சார்ந்து வாழ்வோரின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘நெடுமி’ என்ற படம் தயாராகி உள்ளது. இதில் நாயகனாக பிரதீப் செல்வராஜ், நாயகியாக அபிநயா நடித்துள்ளனர். நந்தா லட்சுமன் இயக்கி உள்ளார். எம்.வேல்முருகன் தயாரித்துள்ளார். ‘நெடுமி’ பட விழாவில் இயக்குனர் பேரரசு பங்கேற்று பேசியதாவது:-
பனை மரத்திற்குத் தமிழ்நாட்டில் பல சிறப்புகள் உண்டு. பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள். பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி. கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது. சிறிய போதை தரும் அவ்வளவுதான் உடலைக் கெடுக்காது. அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம். அதற்கு ஒரு விலையை வைத்துக் கொள்ளுங்கள். உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல். கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். இவ்வாறு அவர் பேசினார்.