இளையராஜா ஒருநாள்கூட மாநிலங்களவைக்கே போகவில்லை!

மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக பதவியேற்ற இசையமைப்பாளர் இளையராஜா, ஒரு நாள் கூட மாநிலங்களவை குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்காத தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். அந்தவகையில், மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த வருடம், ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. மொத்தம் 13 நாட்கள் வரை அக்கூட்டத்தொடர் நடந்தது. இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, நியமன எம்பிக்களில் தடகள வீராங்கனை பிடி உஷா மட்டும், 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். அத்துடன் ஒரு விவாதத்திலும் அவர் கலந்துகொண்டுள்ளார். அதேபோல, வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டிலிருந்து நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா கூட்டத்தொடரில் ஒருநாள் கூட பங்கேற்கவில்லையாம். அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.