நடிகை அபர்ணா பாலமுரளியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள முயன்ற சட்டக் கல்லூரி மாணவர் விரும்ப தகாத முறையில் நடந்துகொண்டது சர்ச்சையானது. முன்பின் தெரியாதவர்கள் இந்த மாதிரி நடந்துகொள்வது அருவருப்பாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
நடிகை அபர்ணா பாலமுரளி மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுடன் பொம்மியாக வாழ்ந்து காட்டியதற்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார். இந்நிலையில், தற்போது அவர் நடித்துள்ள தங்கம் என்ற மலையாள திரைப்படம் நாளை வெளியாகிறது. சஹீத் அரபாத், பிரினிஷ் பிரபாகரன் இணைந்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் வினீத் ஸ்ரீனிவாசன் லீடிங் ரோலில் நடித்துள்ளார்.
முன்னதாக கொச்சியில் உள்ள சட்டக் கல்லூரியில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தங்கம் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அதில், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி ஆகியோரும் பங்கேற்றனர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியை அங்கிருந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பார்த்து ரசித்தனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் மேடை ஏறிய மாணவர் ஒருவர், அபர்ணாவுடன் போட்டோ எடுக்க விரும்பினார். அவரும் மாணவருக்காக தனது இருக்கையை விட்டு எழுந்ததும், அந்த மாணவர் அபர்ணாவின் தோள் மீது கைபோட்டு போஸ் கொடுக்க முயன்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அபர்ணா மாணவரின் கையை தட்டி விட்டதோடு வேகமாக அவரது இருக்கைக்கு சென்று அமர்ந்தார். நடிகையிடம் சட்டக் கல்லூரி மாணவர் இப்படி நடந்து கொண்டது பெரும் சர்ச்சையானது.
அபர்ணா பாலமுரளியிடம் சட்டக் கல்லூரி மாணவர் வரம்பு மீறி நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் அந்த மாணவரை 7 நாட்கள் சஸ்பெண்ட் செய்தது. மேலும், அந்த மாணவரும் மன்னிப்பு கோரியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நடிகை அபர்ணா பாலமுரளி விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “வீடியோவில் பார்த்தது உண்மைதான். முன்பின் தெரியாதவர்கள் இந்த மாதிரி நடந்துகொள்வது அருவருப்பாக உள்ளது. சம்மந்தப்பட்ட நபர் மீது நான் எந்த புகாரும் கொடுக்கவில்லை. அது சட்டக் கல்லூரி என்பதால் அவர்களே நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். அதனால் அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.