ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் காலமானார்!

பழம்பெரும் ஸ்டன்ட் இயக்குநர் ஜூடோ ரத்தினம் வயது மூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 92.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் ஸ்டன்ட் இயக்குநர் ஜூடோ ரத்தினம் காலமானார். 92 வயதான அவர் கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், எதிரிகள் ஜாக்கிரதை, முத்து சிப்பி, துலாபாரம், காசேதான் கடவுளடா, முரட்டுக்காளை, நெற்றிக்கண், போக்கிரி ராஜா, சகலகலா வல்லவன், தீர்ப்புகள் திருத்தப்படும், பாயும் புலி, நான் மகான் அல்ல, தம்பிக்கு எந்த ஊரு, மிஸ்டர் பாரத், விடுதலை உள்ளிட்ட பல படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளார். அதிகபட்சமாக ரஜினிகாந்த் படங்களுக்கு இவர் தான் ஸ்டன்ட் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டன்ட் கலைஞராகவும், ஸ்டன்ட் இயக்குநராகவும் 9 மொழிகளில் 1200க்கும் அதிகமான படங்களில் பணியாற்றிய பெருமைக்குரியவர் ஜூடோ ரத்தினம். தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமின்றி ஆங்கில படங்களிலும் இவர் பணியாற்றி உள்ளார். 63 ஹீரோக்களுக்கு ஸ்டன்ட் காட்சிகள் அமைத்தவர் என்கிற கின்னஸ் சாதனையையும் ஜூடோ ரத்தினம் படைத்துள்ளார். முரட்டுக்காளை, மிஸ்டர் பாரத், பாயும் புலி, பாண்டியன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சும்மா பறந்து பறந்து சண்டை போட்டதெல்லாம் இவருடைய ஸ்டன்ட் இயக்கத்தால் தான். ஒட்டுமொத்தமாக ரஜினிகாந்தின் 46 படங்களில் இவர் பணியாற்றி உள்ளதாக கூறுகின்றனர். காலமான பழம்பெரும் சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்தினம் மாஸ்டரிடம் இருந்து 20க்கும் மேற்பட்ட சண்டை பயிற்சி இயக்குநர்கள் அறிமுகமாகி உள்ளனர். ஜூடோ ரத்தினம் மறைவு செய்தியை அறிந்த சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.