பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவில் நீண்ட காலமாக பிரபல பாடகியாக வலம் வந்தவர் வாணி ஜெயராம். தமிழ் சினிமாவில் முதன் முறையாக தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஒடியா உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம். ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என்று அழைக்கப்பட்டு வந்த வாணி ஜெயராம், சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றுள்ளார். அண்மையில் ஒன்றிய அரசு இவருக்கு பத்மபூஷன் விருதை அறிவித்தது. இந்நிலையில் பாடகி வாணி ஜெயராம் நேற்று திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாணி ஜெயராம் கணவர் இறப்பிற்கு பின்னர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் பணிபுரியும் பெண், வழக்கம்போல் நேற்று காலையில் வீட்டிற்கு வந்து பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனையடுத்து அவர் பக்கத்து வீட்டார்களிடம் தகவலை கூறிய நிலையில், அவர்கள் வாணி ஜெயராமுக்கு போன் செய்துள்ளனர். அவர் போனை எடுக்காததால் வாணி ஜெயராமின் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே விரைந்து வந்த அவர் தன்னிடம் இருந்த மற்றொரு சாவியின் மூலம் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் வாணி ஜெயராம் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் வாணி ஜெயராம் உடலை மீட்டுள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானதாக ஐபிஓ 174 பிரிவின்படி வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் வாணி ஜெயராமன் மரணம் குறித்த அடுத்த கட்ட விசாரணையை துவங்கவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட வாணி ஜெயராமின் உடல், மீண்டும் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தமிழ்நாட்டு ஆளுநர் ரவி, பாடகி சுஜாதா மோகன் உள்ளிட்ட பிரபலங்கல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல், முதலமைச்சர் ஸ்டாலின், வாணி ஜெயராம் மறைவு செய்தி கேட்டு வருந்தினேன். அவரது மறைவு இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாணி ஜெயராமை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், நடிகர் கமல்ஹாசன் ஆகியோரும் வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவும் தனது டுவிட்டரில் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “இந்திய திரையிசையுலகில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி தனக்கென தனியான இடத்தைப் பிடித்துக்கொண்ட வாணி ஜெயராம் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். எனக்கு மிகவும் அற்புதமான பாடல்களை பாடியுள்ளார், அந்தப் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவருடைய குரலும், அவர் பாடுகின்ற அந்த பாணியும் அந்தப் பாடலை மேலும் அழகுபடுத்தியதும் ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். இந்த நேரத்தில் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என பேசியுள்ளார்.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி வாணி ஜெயராம் மறைவுக்கு தமிழ் மொழியில் அஞ்சலி செலுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார். இதேபோல் ஆங்கிலத்திலும் அவர் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்த இரங்கலில், ‛‛பழம்பெரும் பாடகியும், சமீபத்தில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டவருமான வாணி ஜெயராமின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இசை உலகில் அவரது பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கும்” என தெரிவித்து இருந்தார்.