தற்போது கதைகளை கவனமாக தேர்வு செய்து நடிக்க தொடங்கி இருக்கிறேன். இனி வலிமையான கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என தீர்மானித்திருக்கிறேன் என்று நடிகர் பாபி சிம்ஹா கூறியுள்ளார்.
அறிமுக இயக்குனர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வசந்த முல்லை’. இந்த படத்தில் கதாநாயகனாக பாபி சிம்ஹா நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மீரா பர்தேசி இணைந்துள்ளார். மேலும், நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹாவும் எஸ். ஆர். டி. என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ராம் தல்லூரியும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் முன்னோட்டத்தை கன்னட மொழியில் நடிகர் சிவராஜ் குமாரும் தெலுங்கில் சிரஞ்சீவியும் தமிழில் மூத்த பத்திரிக்கையாளர்களும் வெளியிட்டனர். இதன் முன்னோட்ட நிகழ்ச்சியில் நடிகர் பாபி சிம்ஹா பேசியதாவது:-
தற்போது கதைகளை கவனமாக தேர்வு செய்து நடிக்க தொடங்கி இருக்கிறேன். இனி வலிமையான கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என தீர்மானித்திருக்கிறேன். கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். உடனே வர சொல்லி, ‘வசந்த கோகிலா’ எனும் இந்த படத்தின் கன்னட பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும், ஆசியும் வழங்கினார். தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவிக்கும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். அவரும் உடனே வரச் சொல்லி, ‘வசந்த கோகிலா’ எனும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும், ஆசியும் வழங்கினார். சிவ ராஜ்குமார், சிரஞ்சீவி ஆகியோர் இன்று இந்த உயரத்தில் இருந்தாலும், அவர்களுடைய எளிமை, விருந்தோம்பல் என்னை கவர்ந்தது.
‘டிஸ்கோ ராஜா’ எனும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் ராம் தல்லூரி எனக்கு அறிமுகமானார். நட்புடன் பழகத் தொடங்கியவுடன், படங்களில் இணைந்து பணியாற்றலாமா? என கேட்டார். இணைந்து பணியாற்றலாம் என்று சம்மதம் தெரிவித்து, இயக்குனர் ஒருவரை தேர்வு செய்து படத்தின் பணிகளைத் தொடங்கினோம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கதை முழுமையாகாததால், வேறு கதைகளை தேடத் தொடங்கினோம். நான் இயல்பாகவே வேகமாக முடிவெடுப்பேன். அந்தத் தருணத்தில் முகநூலில் குறும்படம் ஒன்றை பார்த்தேன். அருண் என்ற நடிகர் இரட்டை வேடத்தில் நடித்த குறும்படம் அது. நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தது. அதன் இயக்குனரான ரமணன் புருஷோத்தமாவை முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு சந்தித்தேன். அதன் பிறகு அவர் 2014-ஆம் ஆண்டு முதல் எனக்காக ஒரு கதையினை தயார் செய்து, இணைந்து பணியாற்றலாமா..! என செய்தி அனுப்பியிருந்தது தெரியவந்தது.
அவரிடம், ‘முதல் படைப்பாக இதனை உருவாக்க வேண்டும் என்றளவில் ஏதேனும் கதைகள் இருக்கிறதா?’ என்று கேட்டேன். ஒரே ஒரு வாக்கியத்தில் ‘வசந்த முல்லை’ படத்தின் கதையை சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது. உடனடியாக தயாரிப்பாளர் ராம் தல்லூரியைத் தொடர்பு கொண்டு கதையும் கதை சுருக்கத்தையும் விவரித்தேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. அதே தருணத்தில் ரேஷ்மிக்கும் இந்த கதை பிடித்திருந்தது. பின்னர் படத்தின் திரைக்கதையை உருவாக்கத் தொடங்கினோம். மிகவும் அழுத்தமான திரைக்கதை. படம் தொடங்கி 20 நிமிடத்திற்கு பிறகு ஒரு காட்சியை காணத் தவறினாலும், குழப்பம் ஏற்படலாம். ஏனெனில் இந்த திரைப்படம் ஒரு புதுவித பரிட்சார்த்தமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது.
தயாரிப்பாளர் ராம் தல்லூரி உதவியுடன் ஒரு வணிக ரீதியான திரைப்படத்தை வழங்கி இருக்க முடியும். ஆனால் புதுமையான விசயத்தை நேர்த்தியாக சொல்ல முடியும் என்று நம்பிக்கை இருந்தது. அதனால் ‘வசந்த முல்லை’யை உருவாக்கி இருக்கிறோம். ஒரே இரவில் நடைபெறும் கதை என்பதால், மூணாறு போன்ற மலை பிரதேசத்தில் நேரடியாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் படப்பிடிப்பை நடத்தலாம் என திட்டமிட்டோம். ஆனால் காட்சிப்படி இரவு முழுதும் மழையில் நனைந்து கொண்டிருக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதனால், சென்னையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அரங்கம் அமைத்த பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த இயலாத சூழல் உருவானது. பிறகு மீண்டும் அரங்கத்தை மறுசீரமைப்பு செய்து படப்பிடிப்பு நடத்தினோம். இதனால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.