வடக்கனும், கிழக்கனும் சக ஏழை மனிதன்தான்: விஜய் ஆண்டனி

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் டுவீட் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதை பார்த்த பலரும் திரண்டு சென்று அதற்கு கமெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனியின் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு கோடியில் ஒருவன் படம் வெளியாகியிருந்தது. அதற்கு பிறகு, கடந்த வருடம் அவரது நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனால், தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் என வரிசையாக வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. இந்நிலையில், பிச்சைக்காரன் பார்ட் – 2 அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் என்ற படம் தமிழக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இதில், விஜய் ஆண்டனியே மறுபடியும் நடிக்கிறார். அவரே இப்படத்தை இயக்கவும் செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் நடைபெற்றபோதுதான், விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூக்கு எலும்புகள் தற்போது, உடல் நலம் பெற்று வரும் அவர், தீவிரமான ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் டுவீட் பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. அதில், “வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்.. நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன்தான்.யாதும் ஊரே யாவரும் கேளிர்.” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துவருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அது குறித்து விஜய் ஆண்டனி இப்படியான கருத்தை தெரிவித்துள்ளது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம், விவசாயம் பாதிப்பு போன்ற காரணங்களுக்காக, வடமாநில தொழிலாளர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு குடியேறி வருகிறார்கள். அந்தவகையில், தமிழ்நாட்டிற்கும் நாளுக்கு நாள் வெளி மாநிலத்தவர்கள் பணிக்காக படையெடுத்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் இந்த பதிவு அமைந்துள்ளதை இணையத்தில் டிரெண்ட் ஆகி உள்ளது. விஜய் ஆண்டனியின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வந்து கொண்டிருக்கின்றன.