‘அயலி’ வெப் தொடர் இயக்குனரை நேரில் அழைத்து பரிசளித்து பாராட்டு தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
அண்மையில் ஓடிடி வெளியீடாக ரிலீசாக ‘அயலி’ வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விமர்சகர்கள் மத்தியிலும் அமோகமான பாசிட்டிவ் விமர்சனங்களையும் குவித்தது ‘அயலி’. இந்நிலையில் இந்த தொடரின் இயக்குனரை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஓடிடியை பொறுத்தவரை அனைவரையும் கவரும் விதமான வெப் தொடர்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த லிஸ்டில் தற்போது இணைந்திருக்கும் வெப் சீரிஸ் ‘அயலி’. கடந்த ஜனவரி மாதம் ஜீ 5 ஒடிடி தளத்தில் வெளியான இந்த தொடரை முத்துகுமார் என்பவர் இயக்கியுள்ளார். அபி நக்ஷத்ரா, அனுமோல், மதன், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த தொடர் சமூக ஆர்வலர்கள் பலரையும் கவனம் ஈர்த்து வருகிறது.
‘அயலி’ வெப் தொடரில் நடக்கும் சம்பவங்கள் 1990 களில் நடப்பதை போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது. வயதுக்கு வந்த பெண் படிக்கக்கூடாது உடனே கல்யாணம் பண்ணிவிட வேண்டும் என்ற ஊரில் டாக்டர் கனவோடு சுற்றித்திரியும் நாயகி தமிழ்ச்செல்வி. தன்னுடைய கனவுக்காக வயதுக்கு வந்ததை மறைக்கிறார். அவரின் பிடிவாதத்தால் தாயும் அவரின் கனவுக்கு உறுதுணையாக இருக்கிறார். இதனால் நடக்கும் களேபரங்களை நகைச்சுவையுடனும், கிராமத்து அழகியலுடனும், சிந்திக்க வைக்கும் கருத்துகளுடனும் தொடராக இயக்கியுள்ளார் முத்துக்குமார். சிறு வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் குழந்தைப்பேறின் போது அவர்கள் இறப்பது, இளம் கைம்பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பது போன்ற விஷயங்களை பொட்டில் அடித்ததை போன்று பேசியுள்ளது ‘அயலி’ வெப் தொடர்.
எனக்கு என்ன தேவையோ அதுதான் அழகு. ஊர்ல நடக்குற கெட்டதுக்குலாம் சாமிதான் காரணம்னா அந்த சாமியே தேவையில்லை போன்ற நச் வசனங்களும் கவனம் ஈர்த்துள்ளது. குழந்தை திருமணம், சாதி வெறி , மூட நம்பிக்கைக்கு குறிப்பாக பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 8 எபிசோடுகள் கொண்ட தொடராக வெளியான ‘அயலி’ பலரின் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.
இந்நிலையில் அயலி தொடரை பார்த்த உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் முத்துக்குமாரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அயலி’. ZEE5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இப்பட இயக்குநர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.