சினிமா இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்தார்.
சினிமா இயக்குநரும், முன்னணி நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று காலை ராமேஸ்வரம் வந்தார். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி ராமநாதசுவாமி கோயிலுக்குள் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சிறப்பு தரிசனம் செய்தார். நடிகர் விஜய் இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்தான். தனது மகனை வளர்க்க அரும்பாடுபட்டார்.
இந்த நிலையில் ஆன்மீகத்தில் ஈடுபாடுடைய எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று காலை ராமேஸ்வரம் வந்தார். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி ராமநாதசுவாமி கோயிலுக்குள் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சிறப்பு தரிசனம் செய்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிளாட்பாரத்தில் கிடந்த என்னை இந்த அளவிற்கு உயர்த்தியது இறைவன் தான். அவருக்கு நன்றி சொல்லவே இந்த சிவாலயத்திற்கு வந்தேன். எங்கெங்கெல்லாம் சிவாலயம் உள்ளதோ அங்கெல்லாம் சென்று தரிசனம் செய்வது எனக்கு மனநிறைவு, ஆத்ம திருப்தி கொடுக்கிறது. உழைத்தவர் எல்லாம் உயர்ந்ததில்லை. என்னை உயர்த்தியது அந்த சிவனே. எல்லாவற்றிற்கும் சிவன் தான். சிம்ம ராசியான எனக்கு உரித்தான கடவுள் சிவன். ஆகவே, சிவ வழிபாடு நடத்தினேன். எல்லா படங்களிலும் நடித்து வருகிறேன். சினிமா எங்களை வாழ வைக்கிறது. எனது மகன் வளர்ச்சி என்பது அவரது கடும் உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை இவைகளே அவருக்கு பல வெற்றி படங்களைத் தந்துள்ளது. அது மட்டுமின்றி எங்கள் பிரார்த்தனை, இறைவன் அனுக்கிரகம் ஆகியவற்றால் அவர் பல வெற்றி படங்களைக் கொடுத்து வருகிறார். இங்கு ஆன்மிகம் தவிர அரசியல் பேச வேண்டாம். எனது ஒவ்வொரு பிரார்த்தனையும் எனக்காக மட்டுமல்ல. எனது மகன் குடும்பத்திற்காகவும், அவர் மீது அன்பு வைத்துள்ள கோடான கோடி தமிழ் ரசிகர்களுக்கும் நன்றி சொல்லவே. சினிமா தற்போது நல்ல திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது ஆரோக்கியமானது தான். இவ்வாறு அவர் கூறினார்.