ஆந்திராவில் அழகான ஒரு கோயில் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு உருவாகி வருகிறது.
நடிகை சமந்தா நாளை (ஏப்ரல் 28) தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவருக்கு பரிசாக இப்படியொரு கோயிலை ரசிகர் எழுப்பி வருகிறார். நடிகை சமந்தா தனது 36வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். சமந்தாவின் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என இந்தியளவில் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை இன்று முதலே தெரிவித்து வருகின்றனர். சென்னை பொண்ணான சமந்தா ஆந்திராவில் மருமகளாக சென்ற நிலையில், நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவரை விவாகரத்து செய்தார். ஆனால், தமிழ்நாட்டை விட ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தான் சமந்தாவுக்கு ரசிகர்கள் அதிகம். ஹீரோயின் ஓரியன்டட் படங்களையும் அதிகமாக தெலுங்கில் தான் சமந்தா செய்து வருகிறார்.
36 வயதில் எந்தளவுக்கு புகழ் வெளிச்சம் அடைந்தாரோ அதே அளவுக்கு சோதனைகளையும் சந்தித்துள்ளார் நடிகை சமந்தா. சோதனைகளை கடந்து சாதனை நாயகியாக சர்வதேச அளவில் நடித்து அசத்தி வரும் சமந்தாவுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். கோலிவுட், டோலிவுட் என கலக்கி வந்த சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் மற்றும் புஷ்பா படத்தின் ஓ சொல்றியா மாமா பாடல் மூலம் பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். சிட்டாடல் எனும் இந்தி வெப்சீரிஸில் நடித்து வரும் சமந்தா சில இந்தி படங்களிலும் கமிட் ஆகி உள்ளார்.
ரசிகர்கள் ஹீரோக்களுக்கு கோயில் கட்டுவதை விட தங்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோயின்களை சாமிகளாகவே மாற்றி கோயில் கட்டி வருகின்றனர். குஷ்பு, நயன்தாரா மற்றும் நிதி அகர்வாலை தொடர்ந்து நடிகை சமந்தாவுக்கும் தற்போது ஆந்திராவின் பாப்தலா மாவட்டத்தில் அழகிய கோயில் ஒன்றை ரசிகர் ஒருவர் கட்டி வருகிறார். தெனாலி சந்தீப் எனும் ரசிகர் தனது இல்லத்திலேயே சமந்தாவின் திருவுருவ சிலையை வடிவமைத்து கோயில் ஒன்றையும் கட்டி உள்ளார். இந்த ஆண்டு சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த கோயில் நாளை திறக்கப்பட உள்ளதாகவும் அதற்கான டிக்கெட் விற்பனை உள்ளிட்ட பல ஏற்பாடுகளையும் அந்த ரசிகர் ஏற்பாடு செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.