நடிகை கஸ்தூரி கேள்விக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான்!

சமூக வலைதளத்தில் நடிகை கஸ்தூரி எழுப்பிய கேள்விக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் விகடன் விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவுடன் பங்கேற்றார். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதை குறித்து உங்களது கருத்தை தெரிவிக்குமாறு அவர் மனைவி சாய்ரா பானுவிடம், தொகுப்பாளர் கோரிக்கை வைத்தார். தன்னுடைய மனைவி சாய்ரா பானுவிடம் ரஹ்மான், “இந்தி வேண்டாம், தமிழில் பேசு” எனக் கூறினார். அதற்கு சாய்ரா பானு, “எனக்கு, சரளமாக தமிழ் பேச முடியாது, ஆங்கிலத்தில் உரையாட அனுமதிங்கள்” எனக் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகியது.

இதனிடையே நடிகை கஸ்தூரி சமூக வலைதள பக்கத்தில், “என்னது ஆர்.ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘காதலுக்கு மரியாதை’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி மீது வலதுசாரி ஆதரவாளர் என்ற பிம்பம் உள்ளது. அவர் போடும் டுவீட்டுக்கு எதிர்வினையாற்றும் நெட்டிசன்கள் அவரை ”சங்கி” என்றெல்லாம் கலாய்த்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழ் தெரியாது என்று ரஹ்மானின் மனைவி கூறியதை பெரிதுபடுத்தி அதை டிவிட்டரில் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் என்ன என்று கஸ்தூரியை சாடி வந்தனர். மேலும், ரஹ்மான் பல மேடைகளில் இந்தியை புறக்கணித்து தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால் இந்த விஷயத்தை வைத்து ரஹ்மானை தாக்கியதாகவும் கஸ்தூரி மீது விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு மத்தியில் கஸ்தூரியின் டுவீட்டுக்கு ரிப்ளை செய்த ரஹ்மான் ”காதலுக்கு மரியாதை” என்று அன்பாக பதிலடி கொடுத்துள்ளார்.

இதை அடுத்து திமுக ஐடி விங்கை சேர்ந்த நிர்வாகி கஸ்தூரியை கலாய்த்து டுவீட் போட்டார். அதில், “மேடம் உங்க வன்மத்தை அவரிடம் காட்டுனீங்க அவர் எவ்ளோ அன்பா பதில் சொல்லியிருக்கார் பாருங்க, அவர் வீட்ல என்ன பேசுவாங்க உங்களுக்கு தெரியனுமா?அண்ணாமலைகிட்ட சொல்லுங்க ஆடியோ ரெக்கார்டிங் பண்ணி அனுப்புவார். அடுத்தவன் வீட்ல எட்டி பார்க்காதீங்க ப்ளீஸ்” என பதிவிட்டிருந்தார்.

அதற்கு கஸ்தூரி, ”சும்மா உருட்டாதீங்க. என் கேள்வியில் வன்மம் எதுவும் இல்லை. இத்தனை வருடம் தெரியாமல் இருந்தது, அவரே சொல்லித்தானே தெரிய வந்தது. வியப்பு கலந்த நியாயமான வினா எழுப்பியிருந்தேன். நேர்மையாக நேரடியாக என் சந்தேகத்தை கேட்டேன். ARR அவர்கள் cute ஆகா பதில் சொல்லியிருக்கிறார். குறுக்கு புத்தி படைத்தவர்கள் உள்ளே புகுந்து இதில் குளிர் காய நினைக்காதீர்கள். வெறுப்பு அரசியல் செய்யும் திராவிடிய சித்தாந்தவாதிகள் கிடைத்தது சாக்கு என்று இல்லாத பிரச்சினையை உருவாக்க துடிக்கிறார்கள். இதில் அண்ணாமலை எங்கு வந்தார். அதிலேயே தெரிகிறது உங்கள் நோக்கம். சிண்டு முடியும் சாத்தான்களே ஓடி விடுங்கள்” என்று இவ்வாறு கூறியுள்ளார்.

அதற்கு நெட்டிசன்கள், சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இருக்கிறீர்கள், ரஹ்மான் இசையமைத்த படங்களிலும் நடித்துள்ளீர்கள் இருந்தும்கூட அவரது குடும்பத்தை பற்றி உங்களுக்கு தெரியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.