விருந்தகம் நடத்த பணம் வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்கள்: விஜய்

விலையில்லா விருந்தகம் நடத்துவதற்கு ஏதாவது பணம் தேவைப்பட்டால் தாராளமாக என்னிடம் கேளுங்கள் என நடிகர் விஜய் கூறியதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் பூரிப்புடன் தெரிவித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவார் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அதை அரசியல் கட்சியாக மாற்ற போன தந்தை- தாய் மீதே விஜய் கேஸ் போட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தனது பெயரையும் தன் படம் பொறித்த கொடியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என விஜய் தெரிவித்த நிலையில் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு கணிசமான இடங்களில் வென்றனர். அவர்களை நடிகர் விஜய் அழைத்து நேரில் பாராட்டினார். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்கள் செய்த பிரச்சாரம் என்பதை உணர்த்துவதை போல் விஜய் அந்த புகைப்படத்தில் ஒரு ஓரமாக நின்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அவர்கள் போட்டியிட்டனர்.

அதே போல் அண்மையில் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு அனைத்து மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என விஜய் உத்தரவிட்டிருந்தார். அம்பேத்கரை முன்னிறுத்தி விஜய் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி எழுந்தது. அதுமட்டுமல்லாமல் விஜய் ரசிகர்கள் அவருடைய பிறந்தநாள், திருமண நாளின் போது ஏழை எளியவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள். அது போல் கொரோனா ஊடரங்கு, சென்னையில் மழை காலம் உள்ளிட்டவைகளின் போதும் ரசிகர்கள் இல்லாத மக்களுக்கு உதவிகளை செய்துள்ளனர். இது விஜய்யின் காதுகளுக்கும் சென்று அவர்களை ஊக்கப்படுத்தினார்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு மேலாக விலையில்லா விருந்தகம் என்ற ஒரு ஹோட்டலை திருச்சி, சேலம், தஞ்சை உள்ளிட்ட 22 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகள் நடத்தி வருகிறார்கள். அவர்களை சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் நேற்று சந்தித்தார். அப்போது நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்த விஜய், இந்த விருந்தகம் நடத்த பணம் வேண்டும் என்றால் தன்னிடம் கேளுங்கள், உதவி செய்கிறேன் என கூறினாராம். வழக்கம் போல் எது குறித்தும் கவலைக்கொள்ளாமல் மக்கள் பணிகளை செய்ய அறிவுறுத்தியுள்ளாராம்.