இந்துக்கள் தனாதனியர்கள் அல்ல. ஆனால் தனாதனிகள் தேச விரோதிகள்: பிரகாஷ் ராஜ்

சனாதனத்திற்கு எதிராக உதயநிதி பேசிய பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்துக்கள் தனாதனியர்கள் அல்ல. ஆனால் தனாதனிகள் தேச விரோதிகள் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடந்த இந்த மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், இந்த மாநாட்டின் தலைப்பே என்னை கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில் சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். கொசு, டெங்கு, கொரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்து கட்ட வேண்டும். அதை போலதான் இந்த சனாதனத்தையும் எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். சனாதனம்னா என்ன, சனாதனம் என்ற பெயரோ சமஸ்கிருதத்தில் இருக்கிறது. சனாதனம் என்பது சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது மாறாது என்று பொருள். ஆனால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதையும் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என உருவானதுதான் திராவிட இயக்கமும் கம்யூனிச இயக்கமும்! இவ்வாறு உதயநிதி தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர், வழக்கு பதிவு செய்வதாகவும் அறிவித்தனர். ஆனால் உதயநிதியோ எந்த வழக்கையும் தாம் சந்திக்க தயாராக இருப்பதாகவும், சனாதனத்திற்கு எதிராக எப்போதும் பேசுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜும் சனாதனம் குறித்து பேசியுள்ளார். அதில் இந்துக்கள் தனாதனியர்கள் அல்ல. ஆனால் தனாதனிகள் தேச விரோதிகள் என டுவிட் போட்டதுடன் பெரியாரும் அம்பேத்கரும் கையை முறுக்கியபடி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். சனாதன தர்மத்தை விமர்சிக்க கம்யூனிஸ்ட்கள் பயன்படுத்தும் வார்த்தைத்தான் தனாதனி. அதைத்தான் பிரகாஷ் ராஜ் பயன்படுத்தியுள்ளார்.

மேலும் இன்னொரு டுவிட்டில் பிரகாஷ் ராஜ், செங்கோல் நிறுவும் விழாவின் போது பல்வேறு ஆதினங்கள் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த புகைப்படத்தை குறிப்பிட்டு எதிர்காலத்தில் தனாதனி நாடாளுமன்றம் ஏற்படலாம். அன்பான குடிமக்களே இதை நீங்கள் ஏற்கிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.