நடிகர் சூர்யாவின் 43வது படத்தில் ஜோடியாகும் நஸ்ரியா!

இயக்குனர் சுதா கோங்குரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 43வது படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. தற்போது, இந்த பெயரிடப்படாத படத்தின் ஹீரோயின் குறித்த சில தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூர்யா. இவர் நேருக்கு நேர் படத்தின் மூலமாக திரைக்கு வந்தார். பல வருட உழைப்புக்கு பின்னர் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார் சூர்யா. இவர் சவாலான வேடங்கள் தொடங்கி காதல் ரோமியோ, சமூக அக்கறையுடனான கதாபாத்திரம், ஆக்க்ஷன் ஹீரோ என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 43, இயக்குனர் சுதா கோங்குராவுடன் இணைகிறார். சுதா கோங்குரா தமிழ் திரையுலகில் முன்னணியில் இருக்கும் பெண் இயக்குனர். இவர் இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இறுதிச்சுற்று படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றிருக்கிறார் சுதா கோங்குரா.

2020இல் புத்தம் புது காலை என்னும் அந்தாலஜி படத்தை இயக்கினார். அதே ஆண்டு சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் இவர் இயக்கிய சூரரைப் போற்று சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த படம் பெரிய அளவில் ஹிட் ஆனதால், சூர்யா மற்றும் சுதா கோங்குரா மீண்டும் இணைய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே சூர்யா மற்றும் சுதாவின் கூட்டணி சூர்யாவின் 43வது படத்தில் சேர்ந்திருக்கின்றனர். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக அமையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில், சூரியாவின் மிக பெரிய ரசிகரும், மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான் சூர்யாவின் தம்பியாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிப்பார் என தகவல் வெளியான நிலையில், இப்போது வேறொருவரின் பெயர் அடிபடுகிறது.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழில் நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்த நஸ்ரியா சூர்யாவின் 43வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.