வாழ்க்கைக்கு பணம் எந்த அளவிற்கு முக்கியம்? என்பது குறித்து சென்னை லயோலா கல்லூரியில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
சென்னை லயோலா கல்லூரியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது மாணவி ஒருவர் கமல்ஹாசனிடம், “உங்கள் வாழ்க்கைக்கு பணம் எந்த அளவிற்கு முக்கியம் சார்?” என்று கேட்டார். அதற்கு பதில் அளித்து கமல்ஹாசன் பேசுகையில், “என் வாழ்க்கையில் 15 வயது முதல் 16 வயது பணம் என்பது கையில் கிட்டத்தட்ட இல்லவே இல்லைங்க.. அது இல்லாமல் என்னுடைய அனுபவத்தில் 6 மாதம் அட்ஜஸ்ட் பண்ணியிருக்கேன். ஆனால் மூச்சு இல்லாமல் 40 செகண்ட், அல்லது ஒரு நிமிடம் தாங்கும். தண்ணீர் இல்லாமல் ஆறு ஏழு நாட்கள் தாங்கும். சோறு இல்லாமல் 10 நாட்கள் தாங்கும். அதைவிட பணம் எப்படி முக்கியமாக இருக்க முடியும். இதை எல்லாம் வாங்குவதற்கு பணம் ஒரு கருவி அவ்வளவு தான். ஆண்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், தாடி வைக்க வேண்டுமா அல்லது மழிக்க வேண்டுமா என்பது உங்கள் இஷ்டம்.. அதை போய் பிளேடு கிட்ட போய் கேட்டுக்கிட்டு இருக்க முடியாது. அது வெறும் கருவி தான்.. வேணாம் கொஞ்சம் தாடி நீளமாக வச்சுக்கோ, மீசை மட்டும் வச்சுக்கோ என்று அதுவா சொல்லும்.. இதை எல்லாம் பிளேடுக்கு சொல்லத் தெரியாது. அவ்வளவு தான் பணமும்.. அது பேசா மடந்தை.. அவ்வளவு தான்” என்று கூறினார்
விழாவில் மாணவர் ஒருவர் கமலிடம், இன்னொரு கமல்ஹாசனை நாம் பார்க்க முடியுமா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், இதை பாராட்டாக சொல்வதாக நான் சந்தேகப்படுகிறேன். ஏனெனில் இந்த மாதிரி இன்னொருவர் இருக்க முடியாது என்பது போல் சொல்றீங்க.. அப்படி இருக்கவே கூடாது என்பது தான் என்னுடைய கற்பனை.. உடனே இன்னொரு கமலை பார்க்க வேண்டும் என்றால் உங்களது பெயரான பெல்மார்ட் என்பது கமல் என்று மாற்றினால் இரண்டு பேர் இருப்பாங்க.. இல்லைங்க அது சும்மா ஜோக் அடிக்கிறீங்க என்றால், வேண்டாம் ஒரு கண்ணாடி கொண்டு வந்து வையுங்க.. இங்க ஒரு கமல் தெரியும்.. அங்க ஒரு கமல் தெரியும்.. நான் சொல்வது என்னவென்றால், பெல்மாண்ட் மாதிரி இன்னொருவர் வருவாரா என்று சொல்வது மாதிரி நீங்க(மாணவர்) ஆயிடுங்க அவ்வளவு தான்.. இதை பார்த்து பொறாமை படாதீங்க.. இது வெறும் கைரோகை தான்.. நான் பண்ற குற்றங்களை இந்த உடம்பை வைத்து கண்டுபிடிக்கலாம். அவ்வளவுதான் இது.. அடையாளம்.. ஆனால் உங்களுக்கு என்று தனி அற்புத டிஏன்ஏ இருக்கிறது.. அதை பற்றி நான் தசவதாரம் படத்தில் சொல்லியிருப்பேன்.. எல்லாருமே உலக நாயகன் தான் என்று கூறியிருப்பேன்.. ஏனெனில் 40 லட்சம் விந்துக்களில் ஒரு விந்துவில் வந்தவன் தான் நீ.. உன்னுடைய முதல் அப்பியரன்ஸே வெற்றி வீரனாக நீ வந்திருக்கிறாய்.. உன்னை தோல்வியை தழுவ வைப்பது உன்னுடைய சோம்பேறித்தனம் தான் முடியுமே தவிர, உனக்கு முதலில் இருப்பது போல் நம்பிக்கையும் வேகமும் இருந்தால் உன்னை வீழ்த்தவே முடியாது. கமல்ஹாசனை பாராட்டுங்கள்.. இல்லாவிட்டால் எனக்கு சம்பளம் வராது.. கமல்ஹாசனை பாராட்டுங்கள், எனக்கு சம்பளமும் வரும்.. நம்பிக்கையும் வரும்.. இத்தனை பேர் பாராட்டுறாங்களே.. அப்ப நாம் ஏதோ சரியாக செய்கிறோம் என்ற நம்பிக்கை வரும்.. ஆனால் இது மாதிரியே ஆகனும் அப்படீன்னு நினைக்காதீங்க..
நான் சினிமாவில் நடிக்க வந்த போது.. இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என்று வியந்த நடிகர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக என் ஏரிக்கரையில் தெரிந்த முதல் சூரியன் சிவாஜி அவர்கள்.. அதற்கு அப்புறம் தான் தெரியும்.. இப்படி ஒரு கேலக்ஸியே இருக்குது என்று.. அதற்கு காரணம் .. எனக்கு கோணார் நோட்ஸ் கொடுத்து சொல்லி அனுப்பி வைத்தது சிவாஜி சார் தார். நான் உங்களுக்கு சொல்லிக்கொள்வது எல்லாம்.. நான் இன்னொரு சிவாஜியாக நினைக்கவே இல்லீங்க.. இன்னொரு சிவாஜி வருவாரான்னு கூட கேட்கல.. அவர் வந்துட்டே தம்பி என்று கை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுபோல் உங்களுக்கு நான் கைகொடுக்க வேண்டும் அதுதான் ஆசை.. அவர் தான் சொல்லிட்டாருல்ல.. இனி மதிக்கவே வேண்டாம்னு விட்டுறாதீங்க.. அதுதான் எனக்கு ஆக்சிஜன்” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.