நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தை குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம் என்று நேற்றைய நிகழ்ச்சியில் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி, நயன்தாராவின் கூட்டணி தனி ஒருவன் படத்தில் சிறப்பாக வொர்க் அவுட் ஆனது. அந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் இறைவன். அகமது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போன நிலையில், வரும் 28ம் தேதி இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரமோஷன்களில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் சென்னையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் ஹெச் வினோத் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர். முன்னதாக லோகேஷ் கனகராஜூம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் அவர் பங்கேற்க முடியாமல் போனது.
சைக்கோ த்ரில்லராக உருவாகியுள்ள இறைவன் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டியது. ராட்சசன், போர் தொழில் படங்களை தொடர்ந்து அதே ஜானரில் உருவாகியுள்ள இறைவன் படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பை இந்த ட்ரெயிலர் உருவாக்கியுள்ளது. படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ள ஜெயம் ரவி, தொடர்ந்து நடக்கும் சைக்கோ கொலைகளுக்கான கொலையாளியை கண்டுபிடிப்பதாக கதைக்களம் காணப்படுகிறது. இந்தப் படத்திற்கு சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக் குழுவினர் ஏ சான்றிதழை கொடுத்துள்ளனர். மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள சில கெட்ட வார்த்தைகளை நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமீர் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான ஜெயம் ரவியின் ஆதிபகவன் படத்திற்கு முன்னதாக ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது இறைவன் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தை குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம் என்று நேற்றைய நிகழ்ச்சியில் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டுள்ளார். அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில்தான் தான் படங்களை தேர்வு செய்வேன் என்றும் கூறியுள்ள ஜெயம் ரவி, இறைவன் படத்தை மட்டும் குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். தனது அடுத்தடுத்த படங்கள் கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரது இந்தப் பேச்சு படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.