கேப்டன் விஜயகாந்த் நம்மை விட்டுப்போனது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு போயிடுவாருனு நான் நினைக்கல, உயிரோட இருக்கும்போது ஒரு தடவக்கூட அவரை பார்க்கவில்லை என்கிற வருத்தம் என் வாழ் நாள் முழுக்க இருக்கும் என்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் நடிகை ரம்பா பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு செய்தி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து விஜயகாந்த் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் மறைந்து ஒரு மாதம் கடந்துவிட்டாலும் கோயம்பேட்டில் உள்ள நினைவிடத்தில் விஜயகாந்துக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கு வருபவர்களுக்கு தேமுதிக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பிரேமலதா பொதுமக்களை நேரில் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் கலா மாஸ்டருன் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று, அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி விஜயகாந்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரம்பா கூறியதாவது:-
கேப்டன் விஜயகாந்த் மறைவு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவர் இறந்த போது நான் கனடாவில் இருந்ததால் என்னால் வரமுடியவில்லை. அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு போயிடுவாருனு நான் நினைக்கல. இது கடவுளின் முடிவு என்பதால் அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டார். கேப்டன் அவர்களை எனக்கு ஹீரோவாகத்தான் தெரியும். ரொம்ப நல்ல மனுஷன், சூட்டிங் ஸ்பாட்டில் அப்படி கவனித்துக் கொள்வார். என்னை நல்லா பார்த்துக்க சொல்லி, எனக்கு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி என் பெற்றோருக்கு அட்வைஸ் பண்ணாரு. நடிகர் சங்க நிகழ்ச்சியின்போது எனக்கு அடிப்பட்டது. அப்போது என்னை நல்லா கவனித்துக் கொண்டார். அவர் உயிரோடு இருக்கும்போது என்னால் வந்து பார்க்க முடியலனு என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய வருத்தம். இதை நினைச்சி நினைச்சி, எனக்கு வாழ்க்கை முழுவதும் கஷ்டமா தான் இருக்கும். அவர் எந்த உலகத்தில் இருந்தாலும் சந்தோஷமா இருக்கணும். கேப்டன் இவ்வளவு பேருக்கு சாப்பாடு போட்டுருக்கானு சொல்லும் போது, ரொம்ப பெருமையா இருக்கு. விஜயகாந்த் எப்போதும் நம் இதயங்களில் வாழ்வார். இவ்வாறு ரம்பா கூறினார்.