நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனக்கும் அரசியல் ஆசை இருக்கிறது எனக் கூறியுள்ளார் நடிகை வாணி போஜன்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் தனது கட்சியை தொடங்கி, அரசியல் பாதையில் நடைபோடத் தொடங்கியுள்ளார் விஜய். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், 2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என்றும் அறிவித்துள்ளார் விஜய். தற்போது கமிட் ஆகியிருக்கும் படங்களை முடித்துவிட்டு, முழு நேர அரசியலுக்கு வர இருப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளார். அதன் பிறகு படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், முழுமையாக மக்கள் சேவையாற்றப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்பு, அவரது ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது. விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை வாணி போஜன் விஜய்யின் அரசியல் பயணம் பற்றிப் பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற நகைக் கடை திறப்பு விழா ஒன்றில் நடிகை வாணி போஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் அரசியல் ஆசை இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு வாணி போஜன், “ஒரு பிரபல அரசியல் தலைவரின் வாழ்க்கையை நாங்கள் ‘செங்களம்’ என்ற பெயரில் வெப் சீரிஸாக எடுத்தோம். அதில் நான் நடித்த போது எனக்கு அரசியல் ஆசை இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. ஆனால், விரைவில் அரசியலுக்கு வருவேனா என்பது குறித்து தெரியவில்லை” என்றார்.
விஜய், அரசியலுக்கு வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த வாணி போஜன், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். என்னைக் கேட்டால் நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் மக்களுக்காக என்ன செய்கிறார், அவருடைய நோக்கம் என்ன என்பது பற்றி நமக்கும் தெரிய வரும்” என்றார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகை வாணி போஜன் தன்னுடைய அரசியல் ஆசையை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.