பெண்களை அவமதிப்பவன் ஆண் மகனே அல்ல. ஒரு நடிகை குறித்து சுலபமாக வாய்க்கு வந்ததை பேசிவிடாதீர்கள் என்று மிஷ்கின் கூறினார்.
ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் தலை காட்டிய த்ரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படத்திலிருந்து சமீபத்தில் வெளியான லியோ படம்வரை என மொத்தம் 22 வருடங்கள் ஃபீல்டில் இருக்கிறார். ஒரு நடிகை சில வருடங்கள் தாக்குப்பிடிப்பதே அதிசயம் என்ற சூழலில் 22 வருடங்கள் ஹீரோயினாக இருப்பது பெரும் ஆச்சரியமே. த்ரிஷாவை பொறுத்தவரை தன்னுடைய கரியரில் பல போராட்டங்களை சந்தித்தவர். அவர் பீக்கில் இருந்தபோது அவர் தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் அதையெல்லாம் கண்டு அசராத அவர் தனது திறமையால் இன்னமும் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான்கூட த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசினார். அந்த விவகாரம் கடந்த சில நாட்களாகவே ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கும் த்ரிஷா தன்னுடைய காட்டமான பதிலடியை நேரடியாகவே சொன்னார். சூழல் இப்படி இருக்க சேலம் மாவட்ட அதிமுகவின் முன்னாள் நிர்வாகி ஒருவர் திரிஷா மீது அவதூறை கிளப்பினார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையையும், கண்டனத்தையும் பெற்றுக்கொடுத்தது. மேலும் அவருக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பேன் என்று திரிஷாவும் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார். அதனையடுத்து அவருக்கு வக்கீல் நோட்டீஸையும் அனுப்பினார் திரிஷா.
இந்நிலையில் திரிஷா விவகாரம் குறித்து நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “பெண்களை அவமதிப்பவன் ஆண் மகனே அல்ல. ஒரு நடிகை குறித்து சுலபமாக வாய்க்கு வந்ததை பேசிவிடாதீர்கள். நான் இரண்டு முறைதான் திரிஷாவை நேரில் சந்தித்திருக்கிறேன். அவர் மிகவும் எளிமையான பெண். ஒரு நடிகையை உங்களின் காதலியாகக்கூட நினைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதிலும் ஒரு கண்ணியம் வேண்டும்” என்றார்.