“நாங்கள் 50 ஆண்டுகால நண்பர்கள். எனக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது என தெரிந்தும் சால்வையோடு நண்பர் கரீம் நின்றிருந்தார். தெரிந்துகொண்டே சால்வையை கொண்டு வந்தது அவர் செய்த தவறு என்றால், பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழே போட்டது என்னுடைய தவறுதான். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” என வைரல் வீடியோ குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நண்பர் கரீம் உடன் அமர்ந்து சிவகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது:-
காரைக்குடியில் நடந்த சால்வை சம்பவம் தொடர்பான வீடியோவை பார்த்திருப்பீர்கள். இவர் யாரோ எவரோ கிடையாது. என்னுடைய தம்பி. 50 ஆண்டுகால நண்பர். 1971-ல் மன்னார்குடியில் நாடகத்துக்கு தலைமை தாங்க சென்றேன்” என்றார். இடையில் குறுக்கிட்ட கரீம், “அண்ணன் மன்னார்குடி வந்தார். அவரை வரவேற்றவன் நான் தான். முடித்துவிட்டு ஊருக்கு போக வேண்டும் என்றார். சாப்பிடவேயில்லையே என்றேன். ‘நான் எப்போதும் சாப்பிடும் வெங்காயமும், தயிர் சோறும் கொடுத்தால் போதும்’ என்றார். அவருடைய திருமணத்தில் நான் கலந்துகொண்டு வந்தவர்களை வரவேற்றேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய சிவகுமார், “கரீமின் திருமணத்தையே நான்தான் நடத்தி வைத்தேன். இவருடைய மகள், பேரன் திருமணத்துக்கும் நான் சென்றுள்ளேன். பொதுவாக நிகழ்ச்சிகளில் யாராவது சால்வை அணிவிக்க வந்தால், அதை திருப்பி அவர்களுக்கே போர்த்தி விடுவேன். அன்றைக்கு பலரும் பேசிய பின் கடைசியாக நான் பேசினேன். அப்போது மணி 10 ஆகிவிட்டது. மிகவும் சோர்வாக இருந்தேன்.
அப்போது கரீம் அங்கு நின்றிருந்தார். எனக்கு சால்வை போடுவது பிடிக்காது என தெரிந்தும் சால்வையோடு நின்றிருந்தார். தெரிந்துகொண்டே சால்வையை கொண்டு வந்தது அவர் செய்த தவறு என்றால், பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழே போட்டது என்னுடைய தவறுதான். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.