தற்போது சினிமாவில் இருந்து ஒதுக்கி இருக்கும் மும்தாஜ் தனது வாழ்க்கையின் கண்ணீர் கதையை மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
மோனிசா என் மோனாலிசா படம் அவ்வளவாக ஓடவில்லை என்றாலும், அந்த படத்தில் நடித்த மும்தாஜ் பிரபலமானார். அந்த படத்தை தொடர்ந்து மலபார் போலீஸ், குஷி, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சாக்லேட் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக இருந்தார். இவர், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான குஷி படத்தில் கவர்ச்சி உடையில் விஜயிடம் கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா என்ற பாடல் மூலம் மேலும் பிரபலமானார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் கலக்கி வந்த நடிகை மும்தாஜ், கடைசியாக ராகவா லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அதன்பின் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்த மும்தாஜ், சினிமாவை விட்டே விலகினார். இதையடுத்து , பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய மும்தாஜ், திடீரென ஒரு நாள் என் இடுப்பு பகுதியை அசைக்கவே முடியாத அளவிற்கு வலி இருந்தது. அந்த வலியால் மிகவும் துடித்துப்போனேன். ஏன் அந்த வலி என்று பல மருத்துவர்களை பார்த்தும், அது என்ன பிரச்சனை என்று சொல்ல முடியவில்லை. இரண்டு வருடங்கள் அந்த வலியை அனுபவித்து வந்தேன். அப்போது தான் ஒரு மருத்துவமனையில் எடுத்த பரிசோதனையில் எனக்கு, Auto immune நோய் இருப்பது தெரியவந்தது. இந்த நோயால் உடம்பில் எங்கு எங்கெல்லாம், எலும்பின் ஜாயிண்ட் இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் கடுமையான வலியாக இருக்கும், என்னால் உட்கார முடியாது, நிற்க முடியாது உடம்பை அசைக்க முடியாது. இதற்காக தினமும் மருந்து மாத்திரை எடுத்துக்கொள்கிறேன். ஆனால், வெளியில் இருந்து பார்ப்பவர்கள், நல்லாத்தான் இருக்கிறார்கள். நடிக்கிறார்கள் என்று சொல்வார்கள். என் வலி எனக்குத்தான் தெரியும்.
அதே போல மனஅழுத்தத்தில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஏன் அழுகிறேன் எதற்கு அழுகிறேன் என்றே தெரியாது, அது தான் மன நோய்,ஒரு நாள் தொடர்ந்து இரண்டரை மணி நேரம் அழுதுக்கொண்டே இருந்தேன். எதற்கு அழுதேன் என்று இன்று வரை எனக்கு தெரியவில்லை. என் மனஅழுத்தத்தை புரிந்து கொண்டு என்னை அதில் இருந்து மீட்டது என் அண்ணா,என் குடும்பம் மற்றும் அல்லாத்தான். அவர்கள் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால் நான் தற்கொலை செய்து கொண்டு இருப்பேன் என்றார்.
படங்களில் கவர்ச்சியாக நடித்தது குறித்து இப்போது வருத்தப்படுகிறேன். இணையத்தில் இருந்து என் கவர்ச்சி புகைப்படங்களை நீக்க ஆசைப்படுகிறேன். ஆனால், என்னால் அது முடியாது. ரசிகர்கள் தயவுசெய்து என் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பரப்பாதீர்கள். எனக்கு இனிமேல் திருமணமாகும் என்கிற நம்பிக்கையெல்லாம் இல்லை. நடந்தால் பார்ப்போம் என்று நடிகை மும்தாஜ் தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை அந்த பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார்.