பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் விஜய் மீதுபோலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நேற்றுமுன்தினம் ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் என அனைவரும் வாக்களித்தனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் ‘தி கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக ரஷ்யாவில் இருந்து நேற்று முன்தினம் காலை சென்னை திரும்பினார். நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில்உள்ள வாக்குச்சாவடிக்கு விஜய் வருவார் என்பதை அறிந்து அவரைபார்க்கும் ஆவலில் அவரது ரசிகர்கள் காலை முதலே வாக்குச்சாவடி மையம் முன்பும், வீட்டின் முன்பும் குவிய தொடங்கினர். இதனால், அந்த வாக்குச்சாவடி முன்பு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மதியம் 12.30 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு காரில் நடிகர் விஜய் வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார். அப்போது அவரது ரசிகர்களும்விஜய் காரை பின்தொடர்ந்து சாலையில் வந்தனர். வாக்குச்சாவடிக்கு விஜய் வந்தபோது அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், போலீஸ் பாதுகாப்புடன் விஜய் வாக்களித்து சென்றார்.
இந்நிலையில், விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார். பொது மக்களுக்கு இடையூறுஏற்படுத்தும் வகையில் 200-க்கும்மேற்பட்ட நபர்களுடன் தேர்தல்விதிமுறைகளை மீறி விஜய் வாக்குச்சாவடிக்குள் சென்றதாகவும், வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்தவர்களை அவமதித்து வரிசையில் நின்று வாக்களிக்காமல் போலீஸார் உதவியோடு வாக்கை செலுத்தி உள்ளார் என்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.