மாமன்னன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம்தான் வாழை. இந்தப் படம் சிறார்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கலையரசன், நிகிலா விமல், எம். பொன்வேல், ஆர். ராகுல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இதன் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. நவ்வி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி ஹாட்ஸ்டார் இதனை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இந்தப் படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அதில், ‘இந்தப் படம் உங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்தப் படம் உண்மையாக நடப்பவையை பிரதிபலிப்பதால் உங்களால் எதுவும் பேசமுடியாது. ஒவ்வொரு படமும் ஒரு கற்றல்தான்’ எனக் கூறியுள்ளார்.
