காற்று மாசுபாடு பிரச்னை தேசிய அவசர நிலை: ராகுல் காந்தி!

காற்று மாசுபாடு பிரச்னை தேசிய அவசர நிலை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-

வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு பிரச்னை தேசிய அவசர நிலையாகும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பேரழிவானது எண்ணற்ற உயிர்களை அழிக்கிறது.

நம்மைச் சுற்றியுள்ள ஏழைகள் அனைவரும், அவர்களைச் சூழ்ந்துள்ள நச்சுக்காற்றில் இருந்து வெளிவர முடியாமல் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சுத்தமான காற்றுக்காக குடும்பங்கள் தவிக்கின்றன, குழந்தைகள் நோய்வாய்படுகிறார்கள், மில்லியன் கணக்காண உயிரினங்கள் அழிந்து வருகின்றன. சுற்றுலாத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையால் நமது நாட்டுக்கான உலகளாவிய நற்பெயர் சிதைந்துள்ளது.

நூறு கிலோமீட்டருக்கு காற்று மாசு பரவியுள்ளது. காற்று மாசை சுத்தம் செய்வதற்கு முக்கிய மாற்றங்கள் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் அரசாங்கம், நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் குடிமக்களிடமிருந்து தேவைப்படுகிறது. இதை அரசியல் பழிசுமத்தும் விளையாட்டாக பார்க்காமல், நாம் ஒன்றிணைந்து கடமையாற்ற வேண்டியது அவசியம்.

இன்னும் சில நாள்களில் நாடாளுமன்றம் கூடுகிறது. நமக்கு ஏற்பட்டுள்ள கண் எரிச்சல், தொண்டை வலி பிரச்னைகள் குறித்து எம்.பி.க்களுக்கு நினைவூட்டப்படும். நாம் ஒன்றினைவது நமது பொறுப்பு, காற்று மாசு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அனைவருக்காகவும் ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.