அரிட்டாபட்டியை சூழலியல் தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை!

தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி தரக்கூடாது. மேலும் தஞ்சை பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததுபோல், தொல்லியல் சின்னங்கள் நிறைந்த அரிட்டாபட்டி பகுதியை பாதுகாக்கப்பட்ட சூழலியல் தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (நவ.22) மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா தலைமையில் நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநர் ப.சுப்புராஜ், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் பாரதிதாசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி நாற்றாங்கால் அமைக்க முதலாவதாக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினர். அதற்கு முதன்மை பொறியாளர் பாரதிதாசன், “தற்போது ஒருபோக சாகுபடி செய்யப்பட்ட 85 நாள் பயிர்களை காப்பாற்றவே 3 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் வைகை அணை, பெரியாறு அணையை சேர்த்தே 2 டிஎம்சி தண்ணீர் இருப்பதால், பற்றாக்குறையாகவே உள்ளது. அதனால் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நவ.26-ம் தேதி பெய்யும் மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதன்பின்னர் தண்ணீர் திறப்பது குறித்து பேசமுடியும்” என்றார்.

அப்போது விவசாயிகள், அதற்கு முன்னர் விவசாயிகள் கூட்டத்தை கூட்டி அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். அப்போது ஆட்சியர், “நவ.26-ம் தேதிக்கு இரண்டுநாள் தான் இருக்கிறது. நல்ல மழை பொழியட்டும். விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும்,” என்றார்.

அப்போது விவசாயி அருண் என்பவர், “அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் அனுமதி தரக்கூடாது. தஞ்சை பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததுபோல், தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டியை பகுதியை பாதுகாக்கப்பட்ட சூழலியல் தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதேபோல் விவசாயி ஆதிமூலம் என்பவர், “வேதாந்தா ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் 5000 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் வழங்கியுள்ளது. இதில் தமிழக அரசு கவனம் செலுத்தி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் தமிழக அரசு அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்க வேண்டும்” என்றார்.

அப்போது பேசிய ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா, “டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளதாக ஏல அறிவிப்பு பத்திரிகைகளில்தான் செய்தி வந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், அறிவிக்கைகள் வரவில்லை. மத்திய அரசு ஏலம் விட்டாலும் மாநில அரசின் 15 துறைகளின் அனுமதியும், கிராம சபை கூட்டங்களின் அனுமதியும் பெற்றாக வேண்டும். இதுவரை ஏலம் எடுத்த நிறுவனம் எந்த அனுமதியும் கோரி விண்ணப்பிக்கவில்லை. வருவதற்கு முன்பாகவே போராட்டம் நடத்தாதீர்கள். கிராம மக்கள் பயப்பட வேண்டாம். இதுகுறித்து மாநில அரசு உயரதிகாரிகளிடம் பேசிவிட்டேன். யாரும் பயப்பட வேண்டியதில்லை. அனுமதி கேட்டு வருவதற்கு முன்னால் எப்படி தடை போட முடியும்?. மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்புகிறோம். இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டியதில்லை. மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்.” என்றார்.

ஆட்சியரின் பதிலை கேட்டு விவசாயிகள், தடை செய்யும் நடவடிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக கூறியதை ஏற்றுக் கொண்டனர்.