உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல், 30 பேர் பலி!

உக்ரைன் நாட்டில் ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போரை ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. மறுபுறம் அமைதிப் பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் கடந்த வாரம் துருக்கியில் இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக, நேட்டோ அமைப்பில் சேரும் முடிவைக் கைவிட்டு நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க உக்ரைன் சம்மதம் தெரிவித்தது. அதேபோல ரஷ்யாவும் தலைநகர் கீவ் சுற்றியுள்ள நகரங்களில் இருந்து தனது ராணுவத்தைக் குறைக்க ஒப்புக் கொண்டது.

இந்தச் சூழலில் உக்ரைனில் உள்ள ரயில் நிலையம் ஒன்றைக் குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. கிழக்கு உக்ரைனின் கிராமடோர்ஸ் நகரில் உள்ள ரயில் நிலையத்தைக் குறி வைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் இரண்டு ஏவுகணைகள் இந்த ரயில் நிலையத்தைத் தாக்கி உள்ளது. இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து உக்ரைன் மக்களைப் பாதுகாத்து, பத்திரமாக வெளியேற்ற உக்ரைன் அரசு இந்த ரயில் நிலையத்தைத் தான் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.