கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.
கனடாவின் டொரோண்டோ நகரில், இந்திய மாணவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக கனடா போலீசார் கூறுகையில், கார்த்திக் வாசுதேவ் (21) என்ற இந்திய மாணவர், கடந்த வியாழன் அன்று டொரோண்டோ நகர் சுரங்கப்பாதை வழியே வேலைக்கு சென்ற போது அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் சுரங்கப்பாதை வாயிலிலேயே எதிர்பாராத விதமாக சுடப்பட்டார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் மீது சந்தேகம் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கனடாவில் இந்திய மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டு 48 மணி நேரமாகியும் இந்திய அரசோ, கனடா நாட்டு அரசோ எந்த உதவியும் செய்யவில்லை என மாணவரின் தந்தை குற்றம்சாட்டி இருக்கிறார். கார்த்திக் வாசுதேவ் கொலை வழக்கை முடித்து வைக்க சில அதிகாரிகள் முயன்று வருவதாக சந்தேகமடைந்துள்ள அவரது பெற்றோர், கனடாவுக்கு செல்ல விரைந்து விசா வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பேசியுள்ள கார்த்திக்கின் தந்தை, “இந்திய அரசு தரப்பில் ஒரு அதிகாரி கூட எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.” எனக் குற்றம்சாட்டி இருக்கிறார்.