பாகிஸ்தானில் இருக்கப் பிடிக்காவிட்டால் இந்தியாவுக்குப் போயிருங்க என்று பிரதமர் இம்ரான் கானுக்கு, நவாஸ் ஷெரீப்பின் மகளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சித் தலைவருமான மரியம் நவாஸ் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ளது. அவர் தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளார். அவரது அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் மகளும், முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான மரியம் நவாஸ் இம்ரான் கானை கடுமையாக சாடி பேசியுள்ளார். நேற்று இம்ரான் கான் கூறுகையில், ரஷ்ய விவகாரத்தில் இந்தியா எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லும் தைரியம் ஒரு ஐரோப்பிய நாட்டுக்கும் கிடையாது. இந்தியர்கள் சுயமரியாதை மிக்கவர்கள். யாரும் அவர்களை இதை செய் என்று உத்தரவிட முடியாது. இந்தியாவிடம் இதுபோல கூற எந்த வல்லரசு நாட்டுக்கும் தைரியம் கிடையாது என்று கூறியிருந்தார்.
இதற்குத்தான் தற்போது மரியம் நவாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மரியம் கூறுகையில், இம்ரான் கானுக்கு இந்தியாதான் ரொம்பப் பிடித்திருக்கிறது என்றால் பேசாமல் அவர் அங்கேயே போய் விடட்டும். தனது அதிகாரம் பறிபோவதைத் தொடர்ந்து இம்ரான் கானுக்கு மனநிலை பேதலிக்க ஆரம்பித்து விட்டது. இந்தியாதான் அவருக்குப் பிடித்திருக்கிறது என்றால் அவரை அங்கேயே போய் தங்கி விடச் சொல்லுங்கள்.
இந்தியாவைப் பிடிக்கும் என்று சொல்பவர்களுக்கு நான் ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அங்கு பல்வேறு பிரதமர்கள் மீது 27 நம்பிக்கை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் எந்தப் பிரதமருமே அரசியல் சாசனத்துடன் விளையாடவில்லை, ஜனநாயகத்துடன் மோதவில்லை. தார்மீக நெறிகளிலிருந்து வழுவவில்லை. வாஜ்பாய் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். ஆனால் மறுபேச்சு பேசாமல் வெளியேறினார். நாட்டை தன் பக்கம் திருப்ப அவர் முயற்சிக்கவில்லை. அரசியல் சாசனத்தை அவமதிக்கவில்லை. உங்களைப் போல நாட்டை துண்டாட அவர் முயலவில்லை என்றார் அவர்.