அரசியலமைப்பை தீயிட்டுக் கொளுத்துவோம்: புத்த துறவி

இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், இலங்கைக்கு அரசியல்வாதிகளும், அரசியலமைப்பு தேவையில்லை. அதனால் அரசியலமைப்பை தீயிட்டுக் கொளுத்துவோம் என்று இலங்கை புத்த துறவி எச்சரித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவை கடுமையாக விலை உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்த மகிந்த ராஜபக்சே, தனது தலைமையிலான அரசு பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் அறிவித்தார். அதேநேரம் அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், மகிந்த ராஜபக்சே தலைமை அல்லாத மாற்று அரசு அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கையில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என அந்நாட்டு முன்னாள் அதிபரான மைத்ரிபால சிறிசேனா வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் பொலனருவா பகுதியில் நடைபெற்ற மே தின விழாவில் கலந்து கொண்டு பேசிய மைத்ரிபால சிறிசேனா, ‘இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சிக்கலில் இருந்து மீள்வதற்கு மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும்’ என்று கூறினார்.

இதற்கிடையே புத்த துறவி பாகொட ஜன்தவங்ஷ தேரர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இலங்கை மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலையில், அரசியல்வாதிகள் தங்களது அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்கள் என்றால், அவர்களும், அரசியலமைப்பும் பிரயோசனமற்றதாகிவிடும். எனவே இதே நிலைமை தொடருமாயின், நாட்டின் அரசியலமைப்பை தீயிட்டு கொளுத்துவோம். தேசிய கீதம் இசைக்கப்படும் போது மரியாதை செலுத்துவதற்காக எழுந்து நிற்கிறோம். அதே யாராவது மயக்கமடைந்து கீழே விழுந்தால், அப்போது மரியாதை செலுத்த முடியாத நிலைமை ஏற்படும். அதேபோல் நாட்டின் பல்துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களின் நலனுக்காகவே அனைத்து நடவடிக்கையிலும் இறங்க உள்ளோம். இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு அதிபர் அளித்த ஆலோசனையை பிரதமர் ஏற்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிளும் இடைக்கால அரசு அமைப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும். பொதுத்தேர்தல் மூலம் பிரச்னைக்கு தீர்வு காணமுடியும் என்று சில கட்சிகள் கூறுகின்றன. ஆனால், பொதுத்தேர்தலை நடத்தும் சூழல் தற்போது நாட்டில் கிடையாது. இடைக்கால அரசு அமைத்த பின்னரே, பொதுத்தேர்தலை நடத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் இலங்கையில் பிரதமர் அலுவலகம் எதிரே போராட்டத்தை ஒடுக்க போலீசாரும், சிறப்பு அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக் குழுவினர், போலீசாரை அங்கிருந்து விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலகக் கோரி பொதுமக்கள் கடந்த மாதம் 10ம் தேதி முதல் கொழும்பு காலே முகத்திடல் பகுதியில் பிரமாண்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அங்குள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக தற்காலிக முகாம்களை அமைத்து, 24 மணி நேரமும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்போராட்டத்தை ஒடுக்க நேற்று காலை கூடுதல் போலீசாரும், வன்முறையை தடுப்பதற்கான சிறப்பு அதிரடிப் படை போலீசாரும் போராட்ட களத்தில் குவிக்கப்பட்டனர். 2 லாரிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டதற்கு, போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் லத்தி உள்ளிட்ட உபகரணங்களுடன் போராட்ட களத்தை சுற்றி வளைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பிரதமர் அலுவலகத்தில் நுழைவதை தடுப்பதற்காக போலீஸ் படை அதிகரிக்கப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தங்களின் போராட்டம் அமைதியான முறையில் நடப்பதாகவும், போலீஸ் படையை குவித்து கலவரத்தை தூண்டக் கூடாது எனவும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் வேறு வழியின்றி போலீசார் அங்கிருந்து, வந்த லாரிகளிலேயே ஏறி திரும்பிச் சென்றனர்.