உக்ரைன் போர்: புதினை சந்திக்க போப் பிரான்சிஸ் விருப்பம்

உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறியதாவது:-

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க நான் மாஸ்கோ செல்ல தயாராக இருக்கிறேன். இதற்காக 20 நாட்களுக்கு முன்பாக தகவல் அனுப்பினேன். எங்களுக்கு இன்னும் பதில் வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதின் இந்த நேரத்தில் சந்திப்பை நடத்த விரும்பவில்லை என தெரிகிறது. நான் இப்போதைக்கு கீவ் செல்லவில்லை. நான் போக வேண்டிய இடம் கீவ் இல்லை. நான் முதலில் மாஸ்கோ தான் செல்ல வேண்டும். புதினை சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதனால் சிறிது காலத்திற்கு அதிகாரத்தை, தனது நம்பிக்கைக்குரிய நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் நிகோலய் பத்ருஷேவிடம் அவர் ஒப்படைக்க உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா பல நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இச்சூழ்நிலையில், அந்நாட்டு அதிபர் புடின்(69) உடல்நிலை குறித்து பல்வேறு விதமான யூகங்களை வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அவரது தோற்றத்தை வைத்தும் உடல்நிலை பாதிப்பு குறித்து செய்தி வெளியாகின. வயிற்று புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோய் பாதிப்பால் புடின் அவதியடைந்து வருவதாக செய்திகள் வந்தாலும் அது குறித்து உறுதியான தகவல் இல்லை.

இந்நிலையில் அமெரிக்க ஊடகத்தில் வெளியான செய்தியில், புற்றுநோயால் அவதிப்படும் புடினுக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இந்த சிகிச்சை கட்டாயம் என டாக்டர்கள் கூறிவிட்டனர். அறுவை சிகிச்சை மற்றும் அதில் இருந்து மீண்டு வர கொஞ்ச காலம் ஆகும். அந்த நேரத்தில், தற்காலிகமாக தனது அதிகாரத்தை, நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் நிகோலய் பத்ருஷேவிடம் ஒப்படைக்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு தனது அதிகாரத்தை ஒப்படைக்க புடின் விரும்பவில்லை. நாட்டின் அதிகாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் பத்ருஷேவின் கைகளில் இருக்காது. இவர் அதிபராக பதவியேற்றால், நாட்டின் பிரச்னை மேலும் அதிகரிக்கதான் செய்யும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அமெரிக்காவின் பெண்டகன் உறுதிப்படுத்தவில்லை என அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.