ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனியில் அந்நாட்டு அதிபர் ஓலாப் ஸ்கோல்சை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் பேட்டி அளித்த பிரதமர் மோடி, ‘ரஷ்யா – உக்ரைன் போரில் யாரும் வெற்றியாளர் ஆக முடியாது. நாங்கள் அமைதியையே விரும்புகிறோம்’ என பேசினார்.
பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக அளித்த பேட்டியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘உக்ரைன் நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்தே, உடனடியாக சண்டையை நிறுத்துமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. சர்ச்சையைத் தீர்க்க பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு. இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது. ரஷ்யா – உக்ரைன் மோதலில் யாரும் வெற்றி பெற முடியாது. அனைவரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று நம்புகிறோம். போரால் எண்ணெய் விலை விண்ணை முட்டுகிறது. உணவு தானியங்கள் மற்றும் உரங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் விளைவு உலகில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமை. வளரும் மற்றும் ஏழை நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். மோதலின் மனிதாபிமான விளைவுகள் குறித்து இந்தியாவும் கவலை கொண்டுள்ளது’’ என்றார்.
ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் கூறுகையில், ‘‘உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ரஷ்யா ஐ.நா சாசனத்தை மீறியுள்ளது. ஜெர்மனியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
பின்னர், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியா – ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான இரு தரப்பு 6வது ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு பிரதமர் மோடியும், அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் தலைமை தாங்கினர். இக்கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ஜெர்மன் நாட்டு உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ‘வெளியுறவு மற்றும் பாதுகாப்பு, பொருளாதார, நிதிக் கொள்கை, அறிவியல் மற்றும் சமூக பரிமாற்றம், காலநிலை, சுற்றுச்சூழல், நிலையான வளர்ச்சி, ஆற்றல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக ₹79,000 கோடியில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, ஜெர்மனியில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் மோடி கலந்துரையாடினார்.