ஹிட்லரின் வம்சாவளியிலும் யூத இனம் கலந்திருக்கலாம்: ரஷ்ய அமைச்சர்

ஹிட்லரின் வம்சாவளியிலும் யூத இனம் கலந்திருக்கலாம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவோர்வ் பேசியது இஸ்ரேலில் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையே கடந்த 60 நாட்களுக்கும் மேலாக கடும்போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவோர்வ் தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த பல ஆண்டு காலமாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆட்சியை ஹிட்லரின் ஆட்சியோடு ரஷ்யா ஒப்பிட்டு வருகிறது. இந்நிலையில் இத்தாலிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த செர்ஜி இதுகுறித்துப் பேசினார். ‘நான் சொல்வது சரியா என்று தெரியவில்லை. ஆனால் ஹிட்லரின் வம்சவளியிலும் யூத இனம் கலந்து இருக்க வாய்ப்புண்டு, இவ்வாறு செர்ஜி தெரிவித்தார். இதனால் யூதர்கள் அதிகம் வசிக்கும் நாடான இஸ்ரேல் கடும் கொந்தளிப்பில் உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளிடமும் இஸ்ரேல் அரசு சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் யூதர்களை ஹிட்லரின் வம்சாவளியோடு தொடர்புபடுத்தி செர்ஜி பேசியது அவர்களை அவமதிக்கும் செயல் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. யூதர்கள் தங்களுக்குள் நடந்த உள்நாட்டு கலவரம் காரணமாகவே கொத்துகொத்தாக மரணமடைந்தனர் என்று காலாகாலமாக ஹிட்லர் ஆதரவாளர்கள் விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஆமோதிக்கும் வகையில் செர்ஜி கூறிய கருத்து அபத்தமானது என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் யய்ர் லேப்பிட் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து செர்ஜி தங்கள் அரசிடம் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.