மரியுபோல் உருக்காலை மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. கிழக்கு உக்ரைனில் நடந்த குண்டுவீச்சில் 9 பேர் பலியாகி உள்ளனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ், கெர்சான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ரஷ்யப் படைகள் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தின. உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் படையெடுப்பு காரணமாக அந்நாட்டில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கோரிக்கை விடுத்தனர். எனினும் இதற்கு விளாடிமிர் புடின் செவி சாய்க்கவில்லை. . போரை நிறுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமெரிக்க தூதர் மைக்கேல் கார்பென்டர் தெரிவித்ததாவது:
லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் உள்ளிட்ட உக்ரைனின் கிழக்கு பகுதிகளை இம்மாதத்தில் ரஷ்யாவுடன் இணைக்கவும், இதற்கான வாக்கெடுப்பை நடத்தவும் ரஷ்யா திட்டமிட்டு உள்ளது. இதே போல், உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான கெர்சன் நகரையும் சுதந்திர குடியரசாக அங்கீகரிக்க ரஷ்யா திட்டமிட்டு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆதிக்க நடவடிக்கைகளை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒருபோதும் அங்கீகரிக்காது. கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் நகர மேயர்கள், அதிகாரிகள் கடத்தப்பட்டுள்ளதும், அங்கு இணையம் மற்றும் செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதும் ரஷ்யாவின் நடவடிக்கைகளை உறுதிபடுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. அதோடு அந்த நாட்டுக்கு ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை இங்கிலாந்து வழங்கி வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். போர் தொடங்கியதற்கு பிறகு உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் உலக தலைவர் போரிஸ் ஜான்சன் ஆவார்.
போரிஸ் ஜான்சன் தனது உரையின்போது, உக்ரைனுக்கு கூடுதலாக 300 மில்லியன் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,882 கோடி) மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்தார். மேலும் “ஆயுதங்கள், நிதி மற்றும் மனிதாபிமான உதவி” மூலம் உக்ரைனை தொடர்ந்து ஆதரிப்பதாக அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “ரஷ்யாவுடனான மோதலில் உக்ரைனின் மிகச்சிறந்த நேரம் இது. இது தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும் மற்றும் விவரிக்கப்படும். உக்ரைனியர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்த மக்களின் தார்மீக சக்திக்கு எதிராக ஒரு ஆக்கிரமிப்பாளரின் மிருகத்தனமான சக்தி ஒன்றும் இல்லை என்று உலகுக்கு கற்பித்ததாக உங்கள் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் சொல்வார்கள்” என்றார்.
முன்னதாக கடந்த மாதம் முதல் வாரத்தில் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவுக்கு நேரில் சென்று வீதியில் நடந்து சென்றபடியே அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மரியுபோல் உருக்காலை மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. கிழக்கு உக்ரைனில் நடந்த குண்டுவீச்சில் 9 பேர் பலியாகி உள்ளனர்.