உக்ரைனில் சண்டையை உடனடியாக நிறுத்துங்கள்: பிரதமர் மோடி

உக்ரைனில் நடைபெற்று வரும் சண்டையை உடனடியாக நிறுத்துங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல்நாளான ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி 2-வது நாள் பயணமாக டென்மார்க் சென்றுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி டென்மார்க் செல்வது இதுவே முதல்முறையாகும். விமான நிலையம் வந்தடைந்த இந்திய பிரதமர் மோடியை டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் நேரில் சென்று வரவேற்றார். இதனை தொடர்ந்து அங்கிருந்து மரியன்போர்க் நகரில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு இருவரும் சென்றனர். அங்கு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனும், இந்திய பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாட்டு தலைவர்கள் தலைமையில் உயர் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு பின் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய இந்திய பிரதமர் மோடி, ‘நாங்கள் உக்ரைன் விவகாரம் குறித்தும் பேசினோம். உக்ரைனில் சண்டையை உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் பிரச்சினையை தீர்க்கும்படி நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்’ என்றார்.

அதைத் தொடர்ந்து 9 ஒப்பந்தங்கள் இரு நாடுகள் இடையே கையெழுத்தாகின. அவை இடப்பெயர்வு, பசுமை கப்பல் போக்குவரத்து சீர்மிகு மையம் அமைத்தல், இரு தரப்பு கலாசார பரிமாற்ற திட்டம், ஜல்சக்தி அமைச்சகம்- டென்மார்க் சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்பான ஒப்பந்தம், திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பு, கால்நடை வளர்ப்பு-பால்பண்ணை, மந்திரிகள் மட்டத்திலான எரிசக்தி கொள்கை பேச்சு வார்த்தை, சர்வதேச நுண்ணுயிர் எதிர்ப்பு தீர்வு மையத்தில் இந்தியா சேர்வதற்கான ஒப்பந்தம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்குவதில் ஒத்துழைப்பை எளிதாக்கும் டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இன்வெஸ்ட் இந்தியா ஒப்பந்தம் ஆகும். தொடர்ந்து டென்மார்க் ராணி இரண்டாம் மார்க்கெரத்தை அரண்மணையில் சந்தித்து பேசினார் இன்று பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி.