நாம் எந்த மொழி பேசினாலும் சரி இந்தியர்கள் தான்: பிரதமர் நரேந்திர மோடி

டென்மார்க் நாட்டில் அங்குள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் கலாசாரம், மொழி குறித்து பெருமிதம் தெரிவித்தார்

பிரதமர் நரேந்திர மோடி இப்போது மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக ஐரோப்பா நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதலில் ஜெர்மனி சென்று பிரதமர் மோடி பெர்லின் நகரில் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸை சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே மொத்தம் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து பிரதமர் மோடி அங்கிருந்து டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு வந்தடைந்தார்,

பிரதமர் மோடி டென்மார்க் நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். கோபன்ஹேகன் நகரில் இருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். நாட்டில் இப்போது மொழிகள் குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், எந்த மொழியாக இருந்தாலும், நமது கலாசாரம் இந்தியன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை தான் இந்தியச் சமூகத்தின் பலம். எந்த மொழியாக இருந்தாலும் நமது கலாச்சாரம் இந்தியன் தான். ஒரே உலகம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.