இந்தியாவின் ஆன்மீக தலைநகர் தமிழ்நாடு என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீன்வளம் தொடர்பான கருத்தரங்கில் பேசியுள்ளார்.
இந்திய மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு குறித்த 12வது கருத்தரங்கம் சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் ஒன்றிய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அப்போது பேசியதாவது:
முன்பெல்லாம் புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள் முதல் ஆண்டு முழுவதும் புதிய திட்டங்களை அறிவிப்பதற்கும் அதற்கு நிதி ஒதுக்குவதற்கும் செலவிடுவார்கள். நான்காம் ஆண்டு வரும்போது அனைத்தையும் மறந்துவிட்டு தேர்தலை எதிர்கொள்வது பற்றியே யோசிப்பார்கள். தேர்தலுக்குப் பிறகு அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள், மீண்டும் முதலில் இருந்து இதேபோல் செயல்படுவதுதான் நமது நாட்டின் வழக்கமாக இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்காமல், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி சிந்தித்து செயல்படுகிறது.
அடுத்த 25 ஆண்டுகளில் உலகிற்கு வழிகாட்டும் நாடாக இந்தியா திகழ வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கம். இந்தியா நம்பர் 1 நாடாக செயல்படுவதால் ஒரே பாரதம் உன்னத பாரதம் என பிரதமர் முழங்குகிறார். கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா, 150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது. இதுதான் புதிய இந்தியா.
இந்தியாவின் ஆன்மீக தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியா குறித்த பார்வையை உணர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய பெரியவர்கள் பலரும் இதைத்தான் கூறி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
